திருச்சி சிவா உடனடியாக நிபந்தனை இன்றி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்-எம்.எல்.ஏ . ராஜேஷ் குமார்

by Staff / 16-07-2025 09:44:52pm
திருச்சி சிவா உடனடியாக நிபந்தனை இன்றி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்-எம்.எல்.ஏ . ராஜேஷ் குமார்

கண்டன அறிக்கை.

கர்மவீரர் காமராஜர் குறித்து அவதூறு கருத்துக்களை பேசிய திருச்சி சிவா உடனடியாக நிபந்தனை இன்றி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

            யாகாவாராயினும் நாகாக்க எனும் வள்ளுவர் வாக்கிற்கு ஏற்ப கறை படாத கரத்துக்கு சொந்தக்காரர் தமிழகத்தில் பொற்கால ஆட்சி தந்த கர்மவீரர் காமராஜர் குறித்து பேசுவதற்கு முன் தன்னுடைய தகுதியை பற்றி திருச்சி சிவா அவர்கள் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேடை கிடைத்தது விட்டது மைக் கிடைத்து விட்டது என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று நீங்கள் நினைத்து கர்மவீரர் காமராஜரை பற்றி பேசி இருப்பது கட்சிகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ள முடியாத கண்டிக்கத்தக்க செயல் காமராஜர் அவர்கள் எவ்வளவு எளிமையாக வாழ்ந்தார்கள் அவர்கள் இறக்கும் பொழுது அவர் பாக்கெட்டிலே என்ன இருந்தது அவருக்கு உடமையாக சொந்த வீடு கூட இல்லாமல் வாடகை வீட்டிலிருந்து நான்கு ஐந்து வேஷ்டி துண்டுகளோடு மறைந்து போனவர் காமராஜர் என்பதை வரலாறு அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும் எதை பேசுகிறோம் என்ன பேசுகிறோம் ? சுய நினைவில் தான் பேசுகிறோமா என தெரியாமல் எதை எதையோ பிதற்றி இருக்கிறார் திருச்சி சிவா அவர்கள்.
              ஏசி இல்லாமல் காமராஜர் தூங்க மாட்டார் என்று சொல்லியிருக்கிறார் திருச்சி சிவா. யார் இல்லாமல் யார் தூங்க மாட்டார் என்பது அனைவரும் அறிந்த விஷயம் ஒரு முதலமைச்சராக அரசினர் விடுதியில் தங்கி வெப்பம் அதிகமாக இருந்தால் மரத்தடியில் கட்டிலைப் போட்டு உறங்கியவர் காமராஜர். தனக்கு காவலாக நின்றவர்களைக் கூட உறங்கச் சொல்லிவிட்டு தனித்தே உறங்கிப் பழக்கப்பட்ட எளிமையாளர்.   
               கூட்டணி தர்மத்தை கருத்தில் கொண்டு நாகரீகமாக நான் என்னுடைய கண்டனத்தை பதிவேற்றம் செய்ய வேண்டி இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைமை திருச்சி சிவா அவர்கள் மீது கடும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். தந்தை பெரியார் அவர்கள்  கடவுள் மறுப்பாளராக இருந்தாலும் கூட காமராஜரை தமிழக மக்களை காக்க வந்த ரட்சகர் என பேசியது குடியரசு பத்திரிக்கையில் எழுதியது அனைவரும் அறிந்த ஒன்று நாளும் மக்களுக்காக சிந்தித்து நாட்டு மக்களுக்காகவே தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர் கர்மவீரர் காமராஜர் 9 - ஆண்டு காலம்  நாட்டின் விடுதலைக்காக சிறையில் அடைக்கப்பட்டவர் என்பதை நாடறியும் நல்லவர்கள் அறிவார்கள் நாட்டு மக்கள் அறிவார்கள்  இயக்கம் பெரிதா பதவி பெரிதா என்ற நிலை வந்த போது 9 ஆண்டு காலம்  தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்த காமராஜர் பதவியை ராஜினாமா செய்து விட்டு மக்கள் பணியாற்ற சென்றவர் பல பிரதமர்களை தலைவர்களை உருவாக்கியதால் கிங்மேக்கர் என அழைக்கப்பட்டவர். தமிழகத்தை தாண்டினாலே கோட்டும் சூட்டும் போட்டு அலையும் அரசியல் அலப்பறைகள் மத்தியில் ரஷ்யா நாட்டுக்கு சென்ற போது கூட வேட்டி சட்டையில் சென்ற எளிமைக்கு சொந்தக்காரர் கர்மவீரர் காமராஜர். மக்களை சந்திக்காமல் இளைஞர்களுக்கு வழிவிடாமல் கொல்லைப்புறவழியில்  பதவி சுகத்தை அனுபவித்து வரும் திருச்சி சிவா போன்ற தனிமனித ஒழுக்கம் இல்லாதவர்கள் கர்மவீரர் காமராஜரை பற்றி தொடர்ந்து பேசினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

செ. ராஜேஷ் குமார் MLA
தலைவர், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி,  
தமிழ்நாடு.

 

Tags : Trichy Siva should immediately and unconditionally apologize publicly - MLA Rajesh Kumar

Share via