போராட்டம் காரணமாக இடமாற்றம் செய்யப்பட்ட டாஸ்மாக் கடையால் பரபரப்பு.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ளது செட்டியார்பண்ணை. இந்த பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு மதுபானக்கடை திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட நாள் முதலே அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மதுபானக்கடை உடனடியாக மூடப்பட்டது. ஆனால் அங்கு விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டிகள் அனைத்தும் கடைக்குள்ளே இருந்தது.
இந்த நிலையில் இன்று மதுபானக்கடைக்குள் இருந்த அனைத்து மதுபாட்டிகளையும் எடுத்து செல்வதற்காக ஒரு லோடு வேனில் ஏற்றினர். அப்போது அந்த பகுதி மக்கள் இதுகுறித்து காவல்துறையிருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தட்டார்மடம் போலீசார் மதுபாட்டிகளை ஏற்றியவர்களிடம் விபரங்களை கேட்டனர். மேலும் ஒரு மதுபானக்கடையில் இருந்து மதுபாட்டிகளை ஏற்றும்போது சம்பந்தப்பட்ட காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதே போல் போலீசாரின் பாதுகாப்புடன் தான் இந்த மதுபாட்டிகளை இடமாற்றம் செய்ய முடியும். ஏன் எங்களிடம் இதுகுறித்து தகவல் தெரிவிக்கவில்லை என்று கேட்டனர்.
அதற்கு மதுபாட்டிகளை ஏற்ற வந்தவர்கள் மலுப்பலான பதிலை கூறி கையில் வைத்திருந்த பேப்பரை கொடுத்தனர். அதில் எந்தவிதமான சரியான விபரங்களும் இல்லை. எனவே காவல்துறையினர் மதுபாட்டிகளை ஏற்ற வந்தவர்களை எச்சரித்து அனுப்பினர்.
முறையான அனுமதி சீட்டு இல்லாமலும், காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்காமலும் கொண்டு செல்லப்படும் இந்த மதுபான பாட்டிகள்கள் உள்ளூரில் உள்ளவர்களிடம் விற்பனைக்காக இங்கிருந்து எடுத்துச் செல்லப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் அவர்கள் இன்னும் ஓரிரு வாரத்தில் இங்கு மீண்டும் ஏற்கனவே மூடப்பட்ட மதுபானக்கடை திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாக கூறி அதையும் அங்கிருந்தவர்களிடம் காண்பித்தனர். ஏற்கனவே இந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த பிறகு தான் இந்த கடை இங்கு தற்காலிகமாக மூடப்பட்டது. தற்போது மீண்டும் மதுபானக்கடையை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags : The Tasmac store, which was relocated due to the protest, caused a stir.