மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் ; இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு.

தென்காசி மாவட்டம், வல்லம் பகுதியில் நேற்று முன்தினம் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி பாக்கியலட்சுமி என்ற பதினொன்றாம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமி உயிரிழந்த நிலையில், இந்த விபத்து திட்டமிட்டது எனவும், தனது மகளை வல்லம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்ற 24 வயது இளைஞர் கடத்தி செல்லும்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது எனவும், ரமேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி செங்கோட்டை காவல் நிலையத்தில் பாக்கியலட்சுமியின் தந்தை ராமச்சந்திரன் புகார் அளித்தார்.
இருந்தபோதும், போக்சோ வழக்கு பதிவு செய்ய முதலில் போலீசார் தயங்கிய நிலையில், அவர்களுக்கு கண்டனம் தெரிவித்து பாக்கியலட்சுமியின் உறவினர்கள் திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத்தொடர்ந்து, ஏ.டி.எஸ்.பி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், போக்சோ வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து சென்றனர்.
இந்த நிலையில், முதற்கட்டமாக விபத்து தொடர்பாக மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இளைஞர் ரமேஷை போலீசார் கைது செய்து செங்கோட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு ரமேஷை ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், இது தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது இளைஞர் ரமேஷ் மீது கூடுதலாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags : மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் ; இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு.