தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழக அரசு வழங்கும் பல்வேறு சேவைகளை பொதுமக்களின் வீடு தேடிச் சென்றடைய செய்யும் வகையில் மாநிலத்தில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரேசன் பொருட்களான அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், இதற்கு தாயுமானவர் திட்டம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் வகையில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள தண்டையார்பேட்டை கோபால் நகருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் நேரில் சென்று ரேசன் பொருட்களை வீடு தேடி வினியோகம் செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் வாயிலாக தமிழ்நாடு முழுவதும் உள்ள 34,809 நியாயவிலைக் கடைகளை சேர்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை கொண்ட 15 லட்சத்து 81 ஆயிரத்து 364 ரேசன் கார்ட்டில் உள்ள 20 லட்சத்து 42 ஆயிரத்து 657 பயனாளிகளும், 91 ஆயிரத்து 969 ரேசன் அட்டைகளில் உள்ள ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 797 மாற்றுத்திறனாளிகளும் பயன் அடைய உள்ளனர்.
அதாவது மொத்தம் 16 லட்சத்து 73 ஆயிரத்து 333 ரேசன் கார்டுகளில் உள்ள 21 லட்சத்து 70 ஆயிரத்து 454 பயனாளிகளுக்கு இதன்மூலம் பொருட்கள் கிடைக்க உள்ளது.
ஒவ்வொரு மாதமும் 2-வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற தகுதி உள்ள ரேசன் கார்டுகள் மற்றும் பயனாளிகளின் விவரங்கள் அனைத்தும், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையிடம் இருந்து பெறப்பட்டு அந்தந்த பணியாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மூடிய வேன்களில் பொருட்களை பாதுகாப்பாக கொண்டு செல்லும்போது மின்னணு எடை தராசு, பெருவிரல் ரேகை பதிவு செய்யும் எந்திரம் உள்ளிட்ட உபகரணங்களையும் கொண்டு சென்று ரேசன் பொருட்களை வினியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இதன் மூலம் அரசுக்கு ரூ.30 கோடியே 16 லட்சம் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'தாயுமானவர்' திட்டத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ரேசன் பொருட்களை வீடு தேடி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
Tags : தாயுமானவர் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.