மீனாட்சி அம்மன் கோயில் மண்டபம் விரைவில் சீரமைக்கப்படும் - சேகர்பாபு

by Editor / 03-09-2021 02:50:23pm
மீனாட்சி அம்மன் கோயில் மண்டபம் விரைவில் சீரமைக்கப்படும் - சேகர்பாபு

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் கடந்த 02.02.2018 அன்று தீ விபத்து காரணமாக வீர வசந்தராயர் மண்டபம் சேதமடைந்தது. இந்த மண்டபம் திருமலைநாயக்கருக்கு முன்னர் வாழ்ந்த முத்து வீரப்ப நாயக்கரால் 1609 முதல் 1623 வரையிலான கால கட்டத்தில் கட்டப்பட்டது. தீ விபத்தில் சேதமடைந்த மண்டபத்தை புதுப்பிக்கும் பணிகள் பல ஆண்டுகளாக தாமதமாக நடைபெற்று வந்தன.

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய திருமங்கலம் தொகுதி எம்எல்ஏ ஆர்.பி. உதயகுமார், தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மீனாட்சி அம்மன் கோவில் சீரமைப்பு பணிகள் குறித்து கேள்வி எழுப்பினார்.

உலகப் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் திருக்கோயில் தீ விபத்து நடைபெற்று அதற்கான குழு அமைக்கப்பட்டு அதனை மறுசீரமைப்பு செய்ய நாமக்கல் மாவட்டத்தில்தான் கல் எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அதற்கான முதல்கட்ட பணிகளை தொடங்கினார். அந்த பணிகள் எந்த நிலையில் உள்ளது அதை எப்போது முடிக்கப்படும் என்று ஆர்.பி உதயகுமார் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்துப் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, மதுரையில் 2018 ஆம் ஆண்டு தீ விபத்து நடைபெற்றது. அதற்குப் பிறகு கோவிலை சரி செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது. 2018ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட குழு நடத்திய முதல் கூட்டத்திற்கு பிறகு மூன்று ஆண்டுகள் ஒரு கூட்டம் கூட நடத்தவில்லை என்பதை தெரிவிக்க கடமைப் பட்டிருக்கின்றோம் என்றார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சொந்தமான யானையின் உடல் நிலை சரியில்லை என்றவுடன் நேரடியாக சென்று அதற்கான நடவடிக்கைகளை எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார். அப்போது, தீ விபத்தினால் சேதமடைந்த இருந்த அந்த வீர வசந்தராயர் வாயிலை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியிருந்தார்.

அதன்படி மதுரை மாவட்ட அமைச்சர் மூர்த்தி மற்றும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் நானும் சென்று அதனை ஆய்வு செய்து அதற்காக 19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, அதற்கான கற்கள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

நாமக்கல்லில் அதற்கான தூண்கள் தயாரித்து அங்கிருந்து கொண்டு வரும்போது சேதமடைந்து விடக்கூடாது என்பதற்காக கோயில் வளாகத்திலேயே மண்ணை நிரப்பி, அந்த பணிகள் நடந்து வருவதாகவும் கூறினார். 

 

Tags :

Share via