ஆப்கனில்அமைகிறது தலிபான்களின் புதிய அரசு

by Editor / 03-09-2021 03:04:50pm
ஆப்கனில்அமைகிறது தலிபான்களின் புதிய அரசு

20 ஆண்டுகாலப் போருக்கு பின், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறின. ஆப்கனைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள் ஆட்சி அமைப்பதில் மும்முரம் காட்டிவருகின்றனர். அங்கு எம்மாதிரியான ஆட்சி அமைக்கப்படும் என்பதை உலக நாடுகள் தீவிரமாக கவனித்துவரும் நிலையில், புதிய தலைவர்களுடன் உறவை மேம்படுத்தும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து வடக்கு ஆப்கனில் உள்ள மசார்-இ-ஷெரீப், தெற்கில் இருக்கும் கந்தஹார் ஆகிய நகரங்களை இணைக்கும் விமான சேவைகளை தொடங்கி உள்ளதாக ஐ.நா., அறிவித்துள்ளது. அதேபோல், ஆப்கனில் தூதரகத்தை தொடர்ந்து இயக்க சீனா உறுதி அளித்திருப்பதாக தலிபான் செய்தித் தொடர்பாளர் இன்று டுவிட் செய்துள்ளார்.ஆப்கனில் இருந்து வெளியேற விரும்பும் மக்களை மீட்கும் வகையில் பிரிட்டன், இத்தாலி நாடுகளை சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஆப்கனின் அண்டை நாடுகளுக்கு சென்று பேச்சு நடத்தவுள்ளனர். இந்நிலையில், 'பெண் உரிமை விவகாரம் போன்றவற்றில் சகிப்புத்தன்மையுடன் எங்களது ஆட்சி செய்யப்படும்' என தலிபான்கள் உறுதி அளித்திருந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் அவர்கள் இன்று (செப். 3) ஆட்சி அமைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 'புதிய அரசு குறித்த அறிவிப்பு இன்று மதியம் தொழுகைக்கு பின் வெளியிடப்படும்' என, தலிபான் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. 

 

Tags :

Share via