சிலம்பம் வீரர்களுக்கு வேலை வாய்ப்பு: தமிழக அரசு

by Editor / 04-09-2021 11:03:48am
சிலம்பம் வீரர்களுக்கு வேலை வாய்ப்பு: தமிழக அரசு

வேலைவாய்ப்பில் சிலம்பம் விளையாட்டை 3 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்ப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களின் சாதனைகளை அங்கீகரித்து ஊக்கப்படுத்தும் விதமாக அரசுத்துறைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியிடங்களில், விளையாட்டு வீரர்களுக்காக 3 சதவீத இட ஒதுக்கீடும், பொதுத்துறை நிறுவனங்களில் தலை சிறந்த விளையாட்டு வீரர்களை பணியமர்த்துவதற்கான வழிவகையும் அரசு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்ற, கடந்த ஐந்து வருடங்களில் தமிழ்நாட்டில் வசிக்கும் விளையாட்டு வீரர்கள் இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் உள்ள 46 விளையாட்டுகள் மற்றும் ஒலிம்பிக் அல்லாத 4 விளையாட்டுகளான ரோலர் ஸ்கேட்டிங், ஸ்குவாஷ் கபடி மற்றும் வுஷு ஆகிய விளையாட்டுகள் 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் பரிசீலிக்க தகுதியுடைய விளையாட்டுகள் ஆகும்.இந்நிலையில், வேலைவாய்ப்பில் சிலம்பம் விளையாட்டை 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு இட ஒதுக்கீட்டின் கீழ் பணி நியமனம் மேற்கொள்வதற்கு உரிய பணியிடங்களை கண்டறிந்து பணி நியமனம் மேற்கொள்ள அனைத்துத் துறைத் தலைவர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via