கொடநாடு எஸ்டேட் மீது மூன்று நாட்கள் பறந்த ட்ரோன்

by Editor / 06-09-2021 09:24:19pm
கொடநாடு எஸ்டேட் மீது மூன்று நாட்கள் பறந்த ட்ரோன்

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சயான் மற்றும் தனபால் ஆகியோர் வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு இருப்பதாக சொல்லி இருப்பதையடுத்து இந்த வழக்கில் கூடுதல் விசாரணை தேவை என்று போலீசார் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று விசாரித்து வருகின்றனர். மாவட்ட அமர்வு நீதிமன்றம் கூடுதல் விசாரணைக்காக 4 வார கால அவகாசம் அளித்து இருக்கிறது.

இதையடுத்து டிஎஸ்பி தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கூடுதல் விசாரணை நடைபெற்று வருகிறது. பங்களாவின் மேலாளர் நடராஜன் , கோத்தகிரி மின்வாரிய பொறியாளர், விபத்தில் உயிரிழந்த கனகராஜன் மனைவி கலைவாணி அவரது உறவினர் தினேஷ் ஆகியோரிடம் நீலகிரி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

கொடநாடு எஸ்டேட்டின் நுழைவு வாயிலிலும் போலீஸ் தனிப்படை போலீசார் ஆய்வு நடத்தினர். அதேபோல் கூடலூரு பகுதியைச் சேர்ந்த அனீஸ், சாஜியிடம் உதகையில் உள்ள பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத், கூடுதல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, கோத்தகிரி ஆய்வாளர் வேல்முருகன் ஆகியோர் 4 மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

இதற்கிடையில் விசாரணையில் திடுக்கிடும் தகவல் ஒன்று வெளிவந்திருக்கிறது. தொடர்ந்து மூன்று நாட்கள் கொடநாடு எஸ்டேட் மீது ட்ரோன் பிறந்ததாக எஸ்டேட் மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன் புகார் தெரிவித்துள்ளார்.

சோலூர்மட்டம் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் டோன் பறக்க விட்டது யார் என்ன நோக்கத்திற்காக பறக்க விட்டனர், என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via