உலகம் சுற்றிய தமிழன் 

by Editor / 28-09-2021 06:24:47pm
உலகம் சுற்றிய தமிழன் 

 

எழுத்தாளர் சோமலெ உலகம் சுற்றிய தமிழன் எனலாம் . சோமலெ என்பது சோம.லெட்சுமணன் என்பதன் சுருக்கம்.உலகத்தை, இந்தியாவை, தமிழகத்தைச் சுற்றிவந்தார் என்பது மட்டுல்ல அவருடைய சிறப்பு. சுற்றிவந்த இடங்களைப் பற்றிய பதிவுகளை இந்தத் தமிழ் மண்ணுக்கும் மக்களுக்கும் தந்தார். அவரைப் போல உலகத்தைச் சுற்றியவர்களும் இல்லை;

1921-ம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தின் நெற்குப்பை என்ற சிற்றூரில் பிறந்த சோமலெ, உலகம் முழுவதும் சென்றது வணிக நோக்கத்துக்காகத்தான். அவர்களுடைய பரம்பரைத் தொழிலான ஏற்றுமதி இறக்குமதியில் அனுபவம் பெற வேண்டும் என்பதற்காக மேற்கே அமெரிக்காவிலிருந்து கிழக்கே ஆஸ்திரேலியா வரை பல நாடுகளுக்கும் போய் வந்தார். “போகும்போது வணிகராகப் போனேன், வரும்போது எழுத்தாளராக வந்தேன்” என்று அவர் எழுதுகிறார். அப்படிப் பல நாடுகளுக்கும் வணிகம் தொடர்பாகச் சென்ற அவர், பார்த்த ஒவ்வொரு நாடு பற்றியும் எழுதி வைத்த குறிப்புகளை  படித்தவர்களெல்லாம் அவரை பாராட்டினார்கள் .
பிறகு, பயணத்தையே தன் வாழ்க்கையாகவும் சோமலெ மாற்றிக்கொண்டார். பல்கலைக்கழகங்களில் சில ஆண்டுகள் அவர் பணியாற்றியிருக்கிறார் என்றாலும், காலமெல்லாம் அவர் சுதந்திரப் பறவையாகத்தான் வாழ்ந்திருக்கிறார். அவர் நூறு நூல்களை எழுதியிருக்கிறார். சோமலெவின் நூல்கள் ஆவணங்களாகப் போற்றப்பட வேண்டியவை.
அவருடைய புத்தகத்திலிருந்து, ஒரு கட்டுரையை நாம் பார்த்தால், அவருடைய பார்வை எவ்வளவு நுட்பமாக இருக்கிறது, அவர் வெளிப்படுத்துகிற முறை எவ்வளவு சுவையாக இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். இந்தியாவை அவர் சுற்றிவந்த அனுபவத்தின் வெளிப்பாடு ‘இமயம் முதல் குமரி வரை’ என்ற நூல். வங்கம் என்பதுகூட நாம் குறிப்பிடுகிற முறையில்தான் சொல்கிறோம். அவர் மிகச் சரியாக ‘பங்காளம்’ என்றுதான் எழுதுவார். ‘வா’ என்பதுதான் வங்க மொழியில் ‘பா’ என்று வருகிறது. வங்காளம்தான் அங்கே பங்களாதேஷ் ஆகியிருக்கிறது. அப்படியே, பாசுதேவ் என்பதுதான் தமிழுக்கு வரும்போது வாசுதேவன் ஆகிறது.
உத்தர பிரதேசம் பற்றி சோமலெ எழுதியிருக்கிற பல செய்திகள் மிகச் சுவையாக இருக்கின்றன. இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வருகிற வெளிநாட்டுப் பயணிகள்கூட காஷ்மீரைப் பார்ப்பார்கள், கன்னியாகுமரியைப் பார்ப்பார்கள், பஞ்சாபைப் பார்ப்பார்கள், மும்பைக்கு வருவார்கள், சென்னைக்கு வருவார்கள். கேரளத்தின் அழகைப் பார்ப்பார்கள். வெளிநாட்டிலிருந்து வருபவர்களும் சரி, இந்தியாவில் வாழ்பவர்களும் சரி, உத்தர பிரதேசத்தையும், பிஹாரையும் பார்க்க வேண்டுமெனக் கருதுவதில்லை. உத்தர பிரதேசத்தைப் பார்க்க சோமலெவுக்குத் தோன்றியது. அவர் எழுதியிருக்கிற குறிப்புகள் உத்தர பிரதேசத்தின் பெருமையை விளக்குகின்றன. அடடா! அந்த மாநிலம் இப்படி இருக்கிறதே என்ற கவலையையும் நமக்கு உருவாக்குகிறது.
நம் மொழி பேசுகின்ற, நம் இனம் சார்ந்த மக்களை மட்டுமல்லாமல், உலகெங்கும் இருக்கின்ற மக்களை நேசிக்கின்ற மரபுதான் நம்முடைய மரபு. எனவேதான் உத்தர பிரதேசத்தில் கங்கை ஓடுகிறது, யமுனை ஓடுகிறது, கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி என்பதைப் போல வளமிருந்தும் வறுமையில் ஒரு மாநிலம் இருக்கிறதே என்ற கவலையில் அவர் கட்டுரையைத் தொடங்குகிறார். ஏன் அந்த மாநிலம் அத்தனை வளங்களைப் பெற்றிருந்தும் வறுமையாக இருக்கிறது என்பதற்கு மிகச் சரியான காரணத்தைக் கூறுகிறார்.
இப்படி எல்லாம் இருந்தும்கூட ஏன் அந்த மாநிலம் வளம் பொருந்திய மாநிலமாக வரவில்லை என்பதற்கு மிக நுட்பமான பார்வையை அவர் வெளிப்படுத்துகிறார். அங்கே, அடுத்தடுத்துக் கோயில்களும், மசூதிகளும் இருக்கின்றன. மதங்களில் அவர்கள் காட்டுகிற ஈடுபாட்டை வேளாண்மையில் காட்டவில்லை. அத்தனை நதிகள் ஓடுகிறபோதும், முப்போகம் விளைவிக்க அவர்கள் முயற்சிசெய்யவில்லை. வளமிருந்தும் அந்த மாநிலம் வறுமையில் இருக்கிறது என்பதை அறிவியல் பார்வையிலே அவர் எடுத்துச் சொல்கிறார்.
உத்தர பிரதேசத்தின் மொழி இந்தி என்று நாம் கருதுகிறோம். ஆனால், ஒவ்வொரு பகுதியிலும் வேறு மொழியை அவர்கள் பேசுகிறார்கள் என்பதை சோமலெ எடுத்துக்காட்டுகிறார். மீரட்டில் பேசப்படுவது கரிபோலி, ஆக்ராவுக்கு வந்தால் பிரஜ்பாஷா, காசியில் போஜ்பூரி, அயோத்திக்குப் போனால் அவந்தி என்று ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மொழியைப் பேசுகிறார்கள். ஒருவர் சோமலெவைப் பார்த்து “தூம்ர சகட விகார மந்திர பிரவேச அநுமதி பத்ரா வாங்கிவிட்டீர்களா?” என்று ரயில் நிலையத்தில் கேட்கும்போது சோமலெவுக்கு இந்த ‘கடா முடா’ சொற்களுக்கு அர்த்தம் புரியவில்லை. வேறு ஒன்றுமில்லை, மிக எளிமையான பிளாட்பாரம் டிக்கெட் என்பதைத்தான் “தூம்ர சகட விகார மந்திர பிரவேச அநுமதி பத்ரா” என்று சொல்கிறார்கள் என அவர் எழுதுகிறார். இதில் அனுமதி மட்டும்தான் தமக்குப் புரிகிறது. எனவே, அங்கு இந்தி என்ற பெயரில் பல மொழிகள் பேசப்படுகின்றன என்கிற செய்தியையும் குறிப்பிடுகிறார். இது இந்தியாவைப் பற்றிய அவருடைய பயணப் பார்வை.
உலக நாடுகள் வரிசை, இமயம் முதல் குமரி வரை, தமிழக மாவட்ட வரிசைகள் எனத் தமிழ்ப் பயண இலக்கியத்துக்கு அடித்தளமிட்டவர் சோமலெ. இன்று சுற்றுலாத் துறை மிகப் பெரிய துறையாக வளர்ந்துகொண்டிருக்கிறது. 

 

Tags :

Share via