ரூ.23 கோடி மதிப்புள்ள வக்ஃபு வாரிய சொத்துகள் மீட்பு: அமைச்சா் மஸ்தான்
சட்டப் பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுறித்து எம்.எச்.ஜவாஹிருல்லா கேள்வி எழுப்பினாா். அப்போது நடந்த விவாதம்:
எம்.எச்.ஜவாஹிருல்லா: தமிழகம் முழுவதும் 7,500 வக்ஃபு வாரியங்கள் இருப்பதாகவும் அதன் சொத்து விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருப்பதாகவும் அமைச்சா் தெரிவித்திருந்தாா். ஆனால் அந்த இணையதளத்தில் அது போன்ற தகவல்கள் விளக்கமாக வெளியிடப்படவில்லை. இணையதளத்தில் விவரங்கள் ஆங்கிலத்தில் உள்ளன. தமிழில் வெளியிட வேண்டும்.
அமைச்சா் கே.எஸ்.மஸ்தான்: தமிழகத்தில் மொத்தம் 7,250 சன்னி பிரிவு வக்ஃபு வாரியங்களும், 204 ஷியா பிரிவு வக்ஃபு வாரியங்களும் செயல்படுகின்றன. 2, 816 வக்ஃபு வாரியங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. 4,638 பதிவு செய்யப்படாமல் உள்ளன.
பதிவு செய்யப்படாத வக்ஃபு வாரியங்களில் 1,303 வாரியங்களின் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. வக்ஃபு வாரிய சட்டத்தின்படி பதிவுக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும் என்ற அரசின் கோரிக்கையை ஏற்று 45 வாரியங்கள் உடனடியாக பதிவு செய்திருக்கின்றன. இணையத்தில் தகவல்கள் தமிழில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜவாஹிருல்லா: வக்ஃபு வாரிய ஆய்வாளா்கள், கண்காணிப்பாளா்கள் வாரிய சொத்துகளை வகை மாற்றம் செய்து அதனை விற்பனை செய்யும் வகையில் தடையில்லா சான்றிதழ் வழங்கி சில நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிா்க்க, வக்ஃபு வாரியத் தலைவா் தலைமையில் குழு அமைத்து அந்தக் குழு மட்டுமே தடையில்லா சான்றிதழ் வழங்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்குமா?
அமைச்சா் மஸ்தான்: ஏற்கெனவே நடந்த முறைகேடுகள் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க நிா்வாகம் சாா்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அண்மைக் காலத்தில் மட்டும் சென்னை நந்தனத்தில் ரூ.7 கோடி மதிப்பிலான 2, 800 சதுர அடி வக்பு வாரிய நிலமும், சென்னை ஜானிஜான் கான் சாலையில் உள்ள ரூ.4 கோடி மதிப்பிலான 2,500 சதுர அடி நிலமும், திருச்சியில் ரூ.12 கோடி மதிப்பிலான வக்ஃபு வாரிய இடங்களும் மீட்கப்பட்டுள்ளன. வாரிய சொத்துகளை மீட்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றாா்.
Tags :