ரூ. 5 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு
வில்லிவாக்கத்தில் பிரசித்தி பெற்ற அகத்தீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமாக அப்பகுதியை சுற்றி பல்வேறு இடங்கள் உள்ளன. இதேப்போல், வில்லிவாக்கம் எம்.டி.எச் சாலையில் குடோன், சலூன், அரிசி கடை என 6க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வீடுகளில் குடியிருந்தும் பல ஆண்டுகளாக வாடகை தராமல் வசித்து வந்தனர். இந்நிலையில், வாடகை கட்டவில்லை என்பதால், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றவேண்டும் என்று தெரிவித்து வந்தனர். இதுெதாடர்பாக அறநிலையத்துறை சார்பில் வழக்கு போடப்பட்டது.
இதனைத்தொடர்ந்து கடந்த 10.4.2018 அன்று வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் செந்தில்குமார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதற்கான தீர்ப்பு கடந்த 9.8.21 அன்று இந்து அறநிலையத்துறைக்கு சாதகமாக வந்தது. அங்கிருந்து ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவின்படி நேற்று அறநிலையத்துறை அதிகாரிகள் ஒரு குடோன் உட்பட 6 கடைகளுக்கு போலீசார் முன்னிலையில் சீல் வைத்தனர். மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு ரூ. 5 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags :