கோடநாடு விவகாரம்: முதல்வர் ஸ்டாலின் - ஈபிஎஸ் விவாதம்

by Editor / 09-09-2021 05:17:52pm
கோடநாடு விவகாரம்: முதல்வர் ஸ்டாலின் - ஈபிஎஸ்  விவாதம்

தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்நிலையில், இன்று (செப். 09) சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது, அதிமுக ஆட்சிக்காலத்தில் காவல் துறைக்காக என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன என்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது, அவை முன்னவர் துரைமுருகன் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்துப் பேசினார். அதற்கு, "திமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து எங்களாலும் பட்டியலிட முடியும்" என ஈபிஎஸ் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஸ்டாலின், "கோடநாடு விவகாரம் சாதாரணமானது அல்ல, அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் முகாமாகவே அது செயல்பட்டது. அங்கிருந்தே அவர் பணிகளை மேற்கொண்டார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அங்கிருந்த சிசிடிவி கேமரா அகற்றப்பட்டது உங்களுக்குத் தெரியாதா?" என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ஈபிஎஸ், "கோடநாடு எஸ்டேட் தனியார் சொத்து. அதனால் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அங்கு பாதுகாப்பு வழங்கவில்லை" என்றார்.

பின்னர், "ஏன் இந்த வழக்கை விசாரிக்கக்கூடாது என நீதிமன்றம் சென்றீர்கள்?" என முதல்வர் கேள்வி எழுப்பினார்.

அப்போது, "வழக்கு விசாரணை நடக்கும்போது வேண்டுமென்றே எங்கள் மீது குற்றம் சுமத்துகிறார்கள். தேர்தல் நேரத்தில் திட்டமிட்டு திமுக இப்பிரச்சாரத்தை முன்னெடுத்தது. இவ்வழக்கில் விசாரணை நடக்கட்டும்" என்றார்.

 

Tags :

Share via