காவல்துறைக்கு 3 மாதத்தில் ஆணையம் - உயர்நீதிமன்றம் உத்தரவு

by Editor / 10-09-2021 02:44:22pm
காவல்துறைக்கு 3 மாதத்தில் ஆணையம் - உயர்நீதிமன்றம்  உத்தரவு

போலீஸாருக்கு குறைந்தபட்சம் 10 சதவீத கூடுதல் ஊதியம் வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கரூர் பகுதியை சேர்ந்த காவலர் மாசிலாமணி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் புகழேந்தி அமர்வு உத்தரவை பிறப்பித்திருந்தனர். இதனையடுத்து இன்று உத்தரவின் நகல் வெளியிடப்பட்டது.

இதில், காவல்துறையில் ஆட்கள் பற்றாக்குறை உள்ள நிலையில், மன அழுத்தம் மற்றும் மனஉளைச்சலுடன் பணி செய்து வருகின்றனர். காவல்துறையினரின் பணி மகத்தான பணியாகும். இப்பணியை வேறு பணிகளுடன் ஒப்பிட முடியாது. இதனால், போலீஸாருக்கு குறைந்தபட்சம் 10 சதவீத கூடுதல் ஊதியம் வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும்.

இனிவரும் காலங்களில் காவல்துறையினருக்கு 8 மணி நேர வேலை முறையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இதன்படி, 3 ஷிப்ட்டுகளில் காவல்துறையினர் பணிபுரிய அனுமதிக்க வேண்டும்.

3 மாதத்தில் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் காவல்துறையினருக்கான ஆணையத்தை அமைக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via