"மத்திய பாஜக அரசின் ஆடுபுலி ஆட்டம் தான் தமிழக ஆளுநர் நியமனம்"- கார்த்திக் சிதம்பரம்

by Editor / 15-09-2021 10:26:06am

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் அடுத்த பழைய பாளையம் பகுதியில் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழரசன் வீட்டிற்கு காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் வருகை தந்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நீட் தேர்வு யாருடைய காலத்தில் கொண்டு வரப்பட்டது என்பதை முதலில் அறிந்து பேசவேண்டும், அரசியல் தெரியாத அரசியல் விபத்தில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வை தமிழக அரசால் மட்டுமே தன்னிச்சையாக ரத்து செய்ய முடியாது. மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவ கழகம் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். அந்த சட்ட சிக்கல்களையெல்லாம் தீர்த்தால் தான் நீட்டை ரத்து செய்ய முடியும்.

திமுக அதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. நீட் விலக்கு குறித்த மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் நீதிமன்றம் செல்வார்கள். ஆனால் எந்த முயற்சியும் மேற்கொள்ளாத அரசாக அதிமுக இருந்தது. மனஅழுத்தத்தால் சில மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது மன வருத்தமாக உள்ளது. எந்த தேர்வு வந்தாலும் அதனை எதிர்கொள்வது குறித்து பள்ளியில் கவுன்சிலிங் வழங்கிட வேண்டும். ஒரு தேர்வு மட்டுமே ஒரு மாணவனின் வாழ்வை நிர்ணயித்து விடக்கூடாது.

தற்போது தமிழகத்தில் நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் நாகலாத்தில் பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தோல்வியடைந்ததால் அவரை அங்கு வைத்து கொள்ள முடியாததால் அவரை நாடு கடத்தி தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்கள். மத்திய பாஜக அரசின் ஆடுபுலி ஆட்டம் தான் தமிழக ஆளுநர் நியமனம். அவர்கள் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் நீக்குவார்கள். யாரை வேண்டுமானாலும் நியமிப்பார்கள். 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது.

தேர்தலில் மகத்தான வெற்றி பெருவோம். பள்ளிக்கூடங்களை நீண்ட காலம் மூடி இருப்பது உகந்ததாக இருக்காது. அது சமுதாயத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இன்டர்நெட், வாட்ஸ் அப், கல்வி தொலைக்காட்சி மூலமாக படிப்பதை நான் ஏற்று கொள்ள மாட்டேன். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு முதலில் பள்ளிகளை திறக்க வேண்டும்" என்று கூறினார்.

 

Tags :

Share via