"ஒரு செங்கலை வைத்து 3 ஆண்டுகள் ஓட்டினீர்கள்"-எம்.பி.சு.வெங்கடேசன்

by Editor / 15-09-2021 10:24:39am

ஒரு செங்கலை வைத்து 3 ஆண்டுகள் ஓட்டினீர்கள், ஒரு கடிதத்தை வைத்து எத்தனை ஆண்டுகள் ஓட்ட நினைக்கிறீர்கள்? என்று மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், “மதுரை எய்ம்ஸ் பற்றி பாஜக தலைவர் அண்ணாமலைக்கு என்னுடைய கேள்வி. பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள்மதுரை எய்ம்ஸ் பற்றி (டுவீட்) செய்தி வெளியிட்டுள்ளார். 150 மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி தரும் வாய்ப்பை தமிழ்நாடு அரசு ஏன் மறுக்க வேண்டும் என்று கண்ணீர் வடித்துள்ளார். குடம் குடமாக கொட்டும் இந்த கண்ணீரில் சிறு துளியேனும் அனிதாவுக்காகவோ, தனுசுக்காகவோ, கனிமொழிக்காகவோ
கசிந்திருந்தால் சற்றேனும் ஆறுதலாயிருந்திருக்கும். பாஜக வோ கல் நெஞ்சோடு நீட் விதி விலக்கு மசோதாவுக்கு எதிராக ஒரே ஒரு கட்சியாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் வாக்களித்து தீரா வஞ்சத்தை தமிழக மக்களின் மீது வெளிப்படுத்தியுள்ளது. எய்ம்ஸ் மருத்துவக் கல்வி அனுமதி பற்றி ஒன்றிய அரசு தனது கடிதத்தில் என்னதான் கூறியிருக்கிறது என்று பார்ப்போம். மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ள பின்னணியில் தமிழ்நாடு அரசும் நிலத்தை தந்து 90 சதவீத சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இந்த கட்டுமானப் பணிகள் முடிவடைய தாமதம் ஆகுமென்பதால் 50 மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி தரலாம்; அதற்காக தற்காலிக இடம் ஒன்றை தமிழ்நாடு அரசு ஒதுக்கித் தர வேண்டும் என்று ஒன்றிய அரசு கேட்டுள்ளது. அந்த தற்காலிக இடத்தில் என்னென்ன இருக்க வேண்டும்?

கல்வி வசதிகள் என்ற முறையில் குளிரூட்டப்பட்ட வகுப்பு அறைகள், உடற்கூறியல்- உடலியல்- நோய் அறிவியல்- உயிர் வேதியியல் – நுண் உயிரியல் இத்தனைக்கும் ஆய்வகங்கள், 50 பேர் அமரக்கூடிய ஒலி ஒளி காட்சி நிகழ்வறை, உயிரியல் அறுப்பு சோதனை அறை, அச்சு மற்றும் மின்னணு நூல்களைக் கொண்ட இணைய வசதியுடனான நூலகம், மாணவர்களுக்கான கிராமப்புற உடல் நல மையம், தேர்வு அறை, எய்ம்ஸ் பேராசிரியர் நியமனம் நடைபெறும் வரை தற்போது பணியில் உள்ள மருத்துவக் கல்லூரி பேராசிரியர்களின் சேவையை உறுதி செய்தல் ஆகியன அடங்கும். தங்குமிட வசதி என்ற வகையில் எல்லா மாணவர்களுக்கும் தங்கும் விடுதி, உணவு அரங்கம், கல்விக் கூடம் தொலைவில் இருந்தால் போக்குவரத்து வசதி ஆகியன அடங்கும்.
பொழுதுபோக்கு வசதிகள் என்ற வகையில், புறவெளி விளையாட்டு மைதானம், சதுரங்கம் – மேசைப்பந்து போன்ற ஏற்பாடுகளுடன் விளையாட்டு உள்ளரங்கம், யோகா – தியானத்திற்கு இட வசதி, டிவி – டிவிடி – இசை ஆகியன உள்ளடங்கிய அறை, இணைய மையம் ஆகியன அடங்கும். நிர்வாக அலுவலகம் என்ற வகையில் நிர்வாக இயக்குனர், துணை இயக்குநர் (நிர்வாகம்), மருத்துவக் கண்காணிப்பாளர், நிதி ஆலோசகர் மற்றும் முக்கியமான அலுவலர்களுக்கு போதுமான வசதியோடு இடம் தரப்பட வேண்டும்.

ஒற்றை செங்கலை வைத்து மூன்று ஆண்டுகள் ஓட்டிவிட்டீர்கள், இப்பொழுது ஒற்றை கடிதத்தை எழுதி எத்தனை ஆண்டுகள் ஓட்ட நினைக்கிறீர்கள்?

தமிழக மக்களை திசைத்திருப்பும் வேலையை கைவிடுங்கள். 

 

Tags :

Share via