சென்னையிலிருந்து இலங்கை தலைமன்னாருக்கு மீண்டும் ரெயில்

by Editor / 15-09-2021 04:08:45pm
சென்னையிலிருந்து இலங்கை தலைமன்னாருக்கு மீண்டும் ரெயில்

சென்னையிலிருந்து இலங்கை தலைமன்னாருக்கு நேரடியாக செல்லும் வகையில் ராமேஸ்வரம் போட் மெயில் ரெயில் சேவையும், அதன் தொடர்ச்சியாக கப்பல் சேவையும் நடைமுறையில் இருந்தது. தற்போது, அத்தகைய ரெயில் சேவையை தொடங்குவது குறித்தும் வாரியம் ஆய்வு செய்து ஒன்றிய அரசின் அனுமதி பெறலாமா? என்று கடல்சார் வாரியத்துக்கு அமைச்சர் எ.வ.வேலு யோசனை கூறினார்.

தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் 93- வது கூட்டம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தை தொடங்கி வைத்து அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் 3 பெரிய துறைமுகங்களும், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் 6 சிறிய துறைமுகங்களும், 11 தனியார் அரசு கூட்டு துறைமுகங்களும் செயல்பட்டு வருகின்றன.

கடற்கரைகளையும், கடல் அலைகளையும், நீண்டு, பரந்து, விரிந்துள்ள நீலக்கடலையும், கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து மகிழும் மக்களுக்கு பாதுகாப்புடன்கூடிய நீர் விளையாட்டுகள் உட்பட பல்வேறு பொழுதுபோக்கு வசதிகளையும் கடற்கரை பகுதிகளில் அமைத்துக்கொடுத்தால் மக்கள் மேலும், உற்சாகம் அடைவார்கள் என்பது என் எண்ணம்.

கடலுக்குள் கடலின் ஆழம், கடல் அலைகளின் தன்மை ஆகிய வற்றிற்கு ஏற்ப எங்கெல்லாம் படகுப்போக்குவரத்து நடத்த அனுமதிக்கலாமோ அங்கெல்லாம் ஆய்வு செய்து படகு போக்கு வரத்துகளை அனுமதிப்பது குறித்து பரிசீலனை செய்யலாம். இதற்கு முன் உதாரணமாக ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கரையில் 2010 ஆம் ஆண்டு படகு போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டு, நடத்தப்பட்டுள்ளது. அதற்கு பொதுமக்களுக்கு போதிய பாதுகாப்பு அளிப்பதுடன் தேவையான கட்டுமானங்களையும் மேற்கொள்ள வேண்டும்.

தற்போதைய அரசின் நிதிநிலைமை இதற்கெல்லாம் ஒத்துழைக்குமா? என்பது சந்தேகமே. வெளிநாடுகளில் உள்ளதுபோன்று நீர் விளையாட்டுகள், போட்டிங் போன்றவற்றை தனியார் முதலீடு மூலம் மேற்கொள்ளலாமா? என்பதை இந்த வாரியம் ஆய்வு செய்ய வேண்டும். கடல் நீரில் சுற்றுப்பயணம் மேற்கொள்வது அனைவரும் விரும்பக்கூடியது. சிறிய கப்பல் மூலம் சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை ஒவ்வொரு துறைமுகத்திற்கும் உல்லாசப்பயணம் போய்வர அனுமதிக்க முடியுமா? என்பதையும் இந்த வாரியம் பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

 

Tags :

Share via