தடுப்பூசி செலுத்தினால்தான் அரசின் சலுகைகள், சம்பளம் : புதுவை ஆளுநர்

by Editor / 16-09-2021 05:37:58pm
தடுப்பூசி செலுத்தினால்தான் அரசின் சலுகைகள், சம்பளம் : புதுவை ஆளுநர்

புதுவையில் பண்டிகைக்கான அரசின் சலுகைகள் பெற தடுப்பூசி கட்டாயம், அரசு ஊழியர்கள் ஊதியம் பெறுவதற்கும் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இந்திய விமானப்படை சார்பில், பாகிஸ்தானை எதிர்த்து போரில் வெற்றி பெற்ற 50 -வது ஆண்டு விழா மற்றும் 75-வது சுதந்திர தினவிழாவைக் கொண்டாடும் வகையிலும், கரோனா தடுப்பூசியை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக, 100 கி.மீ. தூரம் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய விமானப் படை வீரர்களின் சைக்கிள் பயணத்தை, புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் இருந்து வியாழக்கிழமை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: புதுவையில் அனைத்து தொகுதிகளிலும் கரோனா தடுப்பூசி போடுவதை முழுமைப்படுத்த வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினருக்கும் ஒரு மருத்துவக் குழுவை கொடுத்து தடுப்பூசியை ஊக்கப்படுத்த ஏற்பாடு செய்துள்ளோம்.

தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழ் இல்லையென்றால் அரசின் நலத்திட்டங்கள் போன்றவை கிடைப்பதற்கு இனி கடுமையான பாதிப்பு ஏற்படும். தீபாவளி போன்ற பண்டிகை நாளில் அரசு அறிவிக்கும் சலுகைகளை பெற தடுப்பூசி சான்றிழ் கட்டாயம் ஆக்கப்படும். அரசு ஊழியர்கள் ஊதியம் பெறுவதற்கு தடுப்பூசி போட்ட சான்றிதழ் அவசியம் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

மேலும், புதுச்சேரியில் அதிகளவு கஞ்சா விற்பனையாவதைத் தடுப்பது குறித்து டிஜிபியிடம் ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாகவும், அதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 

Tags :

Share via