மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாரிடம் அடகு வைக்கவே மத்திய பாரதீய ஜனதா அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்று உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
மக்கள் விரோத மற்றும் ஜனநாயக விரோத போக்கில் மத்திய அரசு செயல்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பினர். வேளாண் சட்டத்தை திரும்ப பெறவும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை குறைக்கவும் கோஷமிட்டனர்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க இளைஞரணி அலுவலகத்தில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மத்திய அரசைக் கண்டித்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களிடம் உதயநிதி ஸ்டாலின் கூறும்போது, “மத்திய அரசு கியாஸ் சிலிண்டர் விலையைக் கடந்த இரண்டு மாதங்களில் 50 ரூபாய் அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையையும் உயர்த்திக் கொண்டே வருகிறது.
நாங்கள் ஆட்சியில் அமர்ந்தவுடன், பெட்ரோல் விலையைக் குறைத்து தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறோம். ஆனால் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அதிகரிக்க அந்நிறுவனங்களை மத்திய அரசே நடத்த வேண்டும் என்று தி.மு.க. வலியுறுத்துகிறது. ஆனால் பாரதீய ஜனதா அரசு பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாரிடம் அடகு வைக்கவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எனவே இவற்றுக்குகெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தி.மு.க. தலைமையில் கூட்டணி கட்சிகள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது என்றார்.
சென்னை சி.ஐ.டி. காலனி இல்லத்தில் எம்.பி. கனிமொழி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது;-
கொரோனா காலத்தில் விலைவாசி உயர்வு மக்களை கடுமையாக பாதித்துள்ளது. விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை பாதிக்கும் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. நீட் மூலம் மாணவர்கள் பழிவாங்கப்படுகின்றனர் என்றார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா தலைமையில் டி.கே.எஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை அண்ணாநகர் இல்லத்தில் வைகோ கருப்புக்கொடி ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்.அசோக் நகர் விடுதலை சிறுத்தைகள் அலுவலகத்தில் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அதேபோல தமிழகத்தின் பல பகுதிகள் மற்றும் வீடுகளில் மக்கள் கருப்பு கொடி ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.
Tags :