மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்; ஸ்டாலின் நாளை துவக்கி வைக்கிறார்
அனைத்து மாவட்டங்களிலும் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தை நாளை 50 இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார் என்று சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
இன்று காலை நிலவரப்படி அரசு சார்பில் 2 கோடியே 75 லட்சம் தடுப்பூசிகளும் தனியார் சார்பில் 19 லட்சத்து 85 ஆயிரம் தடுப்பூசிகளும் என மொத்தம் 2 கோடியே 45 லட்சம் தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளன.
இதில் அரசு சார்பில் 2 கோடியே 2 லட்சம் தடுப்பூசிகளும் தனியார் சார்பில் 15 லட்சத்து 96 ஆயிரம் தடுப்பூசிகளும் என ஆக மொத்தம் 2 கோடியே 36 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
மேலும் இன்று காலை நிலவரப்படி அரசிடம் 9 லட்சத்து 94 ஆயிரம் தடுப்பூசிகளும் தனியாரிடம் 3 லட்சத்து 89 ஆயிரம் தடுப்பூசிகளும் என மொத்தம் 13 லட்சத்து 83 ஆயிரத்து 859 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.
தமிழகத்தில் இன்றைய தினம் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இல்லை. ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே தடுப்பூசி பற்றாக்குறை இருக்கிறது. இதனை சரி செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒன்றிய அரசு கடந்த மாதம் கூடுதலாக 19 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை தமிழ்நாட்டிற்கு வழங்கியது. ஆனால் இந்த மாதம் 29 லட்சம் தடுப்பூசிகள் தருவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசிகள் வர வர பற்றாக்குறை இருக்கும் மாவட்டங்கள் உட்பட அனைத்து மாவட்டங்களுக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.நமக்கு வரும் தடுப்பூசிகள் அனைத்தும் வீணாகாமல் முழுமையாக அனைவருக்கும் செலுத்தப்படும்.
கடந்த 69 நாட்களாக கொரோனா பாதிப்பானது படிப்படியாகக் குறைந்து வந்தது. ஆனால் திடீரென அண்மைக் காலமாக 4 முதல் 5 மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கு பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைபிடிக்காததே காரணமாகும்.
தற்போது கொரோனா அதிகம் காணப்படும் பகுதிகளைக் கண்டறிந்து அங்கு மினி நோய் கட்டுப்பாட்டுப் பகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரவும் பகுதிகளில் மினி நோய் கட்டுப்பாட்டுப் பகுதி அறிவிப்பது குறித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் முடிவு எடுப்பார்கள்.
அனைத்து மாவட்டங்களிலும் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் தொடக்க விழா நாளை நடைபெற உள்ளது. இத்திட்டத்தை 50 இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார்.
மருத்துவமனைகளுக்குச் செல்ல முடியாத நிலையில் இருப்பவர்களுக்கு அவர்களது வீட்டிற்கே சென்று சிகிச்சை அளிப்பதே இதன் முக்கிய நோக்கம் ஆகும். தொற்று நோய், தொற்றா நோய் என அனைத்து விதமான நோய்களுக்கும் இத்திட்டத்தின் மூலம் சிகிச்சை அளிக்கப்படும். இத்திட்டத்திற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்
Tags :