26 ஆயிரத்து 513 பேருக்கு ரூ.1598 கோடி நலத்திட்ட உதவிகள்:  மு.க.ஸ்டாலின் வழங்கினார்

by Editor / 21-09-2021 03:42:15pm
26 ஆயிரத்து 513 பேருக்கு ரூ.1598 கோடி நலத்திட்ட உதவிகள்:  மு.க.ஸ்டாலின் வழங்கினார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் ரூ.1,597.59 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை 26 ஆயிரத்து 531 பயனாளிகளுக்கு வழங்கிடும் அடையாளமாக 10 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (கிராமின்) மற்றும் ஊரக குடியிருப்பு திட்டத்தின் கீழ் 12 ஆயிரத்து 93 பயனாளிகளுக்கு ரூ.255.73 கோடி மதிப்பீட்டில் இலவச தொகுப்பு வீடுகள், தூய்மை பாரத இயக்கம் (கிராமின்) திட்டத்தின் கீழ் 167 பயனாளிகளுக்கு ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் தனிநபர் இல்லக் கழிவறைகள், ரூ.4.20 கோடி மதிப்பீட்டில் 92 சமூக சுகாதார வளாகங்கள், 1,293 பயனாளிகளுக்கு ரூ.4.66 கோடி மதிப்பீட்டில் தனிநபர் இல்ல குடிநீர் இணைப்புகள், ரூ.129.79 கோடி மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், குடிநீர் குழாய் விஸ்தரிப்பு பணிகள், தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் குடிநீர் இணைப்புகள் உள்ளிட்ட 2,217 பணிகள் மேற்கொள்வதற்கான ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 208 பயனாளிகளுக்கு வேலை அட்டையும், 233 பயனாளிகளுக்கு ரூ.5.48 கோடி மதிப்பீட்டில் ஆடு, மாட்டு கொட்டகைகள் அமைத்தல், 24 பயனாளிகளுக்கு ரூ.1.22 கோடி மதிப்பீட்டில் தனிநபர் கிணறுகள் அமைத்தல், 31 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பயனாளிகளுக்கு ரூ.7 லட்சம் நிலுவை ஊதியம், ரூ.39.96 கோடி மதிப்பீட்டிலான குளங்கள் மற்றும் வரத்து வாய்க்கால் தூர் வாருதல்,
திறந்தவெளி சமுதாய கிணறுகள் அமைத்தல், அங்கன்வாடி கட்டடங்கள் கட்டுதல், சமுதாய கூடங்கள் கட்டுதல், மயான சுற்றுச்சுவர் கட்டுதல், சிறுபாலங்கள் அமைத்தல் மற்றும் தார்ச் சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட 411 திட்டப் பணிகள் மேற்கொள்வதற்கான ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.

மேலும், தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.862.22 கோடி மதிப்பீட்டிலான 4 ஆயிரத்து 978 சாலைகள் மற்றும் சிறுபாலங்கள், ரூ.5.79 கோடி மதிப்பீட்டிலான 664 தெருவிளக்குகள், மறுசீரமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.14.13 கோடி மதிப்பீட்டிலான 96 பள்ளிக் கட்டடங்கள், சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள்,

ஆதிதிராவிடர் குடியிருப்புகள் மேம்பாட்டு திட்டம், ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பொது நிதி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம், 15-வது நிதிக்குழு மானியம் ஆகிய திட்டங்களின் கீழ் சிறு மின் விசைப்பம்பு அமைத்தல், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்தல், திறந்தவெளி கிணறு அமைத்தல், சமுதாயக் கூடம் அமைத்தல், சிறுபாலங்கள், தரைப்பாலங்கள் அமைத்தல், சிமெண்ட் கான்கிரீட், தார் சாலைகள் அமைத்தல், பள்ளிக் கட்டடங்கள் கட்டுதல் உள்ளிட்ட 4 ஆயிரத்து 24 திட்டப் பணிகள் ரூ.273.79 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்வதற்கான ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.

 

Tags :

Share via