நீட் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே. ராஜன் குழு சொல்வது என்ன ?

by Editor / 21-09-2021 05:53:24pm
நீட் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே. ராஜன் குழு சொல்வது என்ன ?

 

மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கைக்கான நீட் தேர்வு எழுதுவது கட்டாயமாக்கப்பட்டிருப்பதற்கு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்திருக்கும் நிலையில், இந்தத் தேர்வித் தாக்கம் குறித்து ஆராய்வதற்காக தமிழ்நாடு அரசு, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது.

இந்தக் குழுவில் சமூக சமத்துவதற்கான மருத்துவர்கள் அமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத், முன்னாள் துணைவேந்தர் எல். ஜவஹர் நேசன், மருத்துவத் துறைச் செயலர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா உள்ளிட்ட 9 பேர் இடம்பெற்றிருந்தனர்.
நீட் தேர்வு முறையை ஆராய்ந்த இந்தக் குழு, அந்தத் தேர்வு முறையில் உள்ள பல்வேறு பிரச்னைகளை முன்வைத்தது. அதன்படி,

1. நீட் தேர்வானது, ஒரு மாணவரிடம் படிப்படியாக மேம்படும் கல்வித் திறமைகளைக் கணக்கில் கொள்வதில்லை.

2. நீட் தேர்வில் தேர்ச்சி என்பது கணிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது.

3. நீட் தேர்வானது கற்றுக்கொள்வதற்குப் பதிலாக, ஒரு குறிப்பிட்ட தேர்வு முறையில் தேர்ச்சியடைவதை முன்வைக்கிறது

4. நீட்தேர்வானது கலாசார ரீதியாக, பிராந்திய ரீதியாக, மொழி ரீதியாக, சமூக பொருளாதார ரீதியாக பாரபட்சமாக இருக்கிறது.

நீட் தேர்வு வந்தபின் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேரும் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதைக் காட்டும் தரவுகள்.
ஏ.கே. ராஜன் குழு அமைக்கப்பட்ட பிறகு, அந்தக் குழு பொதுமக்கள், அமைப்புகளிடமிருந்து கருத்துகளைக் கோரியது. மொத்தமாக 86,342 கருத்துகள் வந்திருந்தன. இதில் 65,007 பேர் நீட் தேர்வை எதிர்த்தனர். 18,966 நீட் தேர்வை ஆதரித்தனர். 1,453 பேருக்கு கருத்து இல்லை. 916 பேர் ஏற்கனவே அனுப்பிய கருத்துகளையே திரும்ப அனுப்பியிருந்தார்கள்.

நீட் தேர்வுக்கு ஆதரவாக முன்வைக்கப்பட்ட வாதங்கள்:

1. நீட் தேர்வு எழுதினால் தேசிய அளவிலான கல்வி நிறுவனங்களில் சேரலாம்.
2. நீட் தேர்வை 3 முறை எழுத முடியும். 12ஆம் வகுப்புத் தேர்வைத் திரும்பவும் எழுத முடியாது.
3. நீட் தேர்வினால், மாநில கல்வி வாரிய மாணவர்களும் சிபிஎஸ்இ படித்த மாணவர்களும் ஒரே மாதிரி மதிப்பிடப்படுவார்கள். 12ஆம் வகுப்புத் தேர்வினால் அது நடக்காது.

நீட் வந்தபின் ஸ்டேட் போர்டு மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ் படிக்கும் வாய்ப்பு குறைந்துள்ளதையும், சிபிஎஸ்இ மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ் படிக்கும் வாய்ப்பு அதிகமாகியுள்ளதையும் காட்டும் தரவுகள்.
4. நீட் தேர்வு மனப்பாடம் செய்து கற்றுக்கொள்வதற்கு மாறாக, புரிந்துகொண்டு எழுதுவதை முன்வைக்கிறது. இது நல்லது.
5. தமிழ்நாட்டில் கற்றுக்கொடுக்கும் முறை மேம்பட வேண்டும். நீட் தேர்வை நடத்தினால், காலப்போக்கில் கற்றுக்கொடுப்பது மேம்பட்டு, கோச்சிங் மையங்கள் தேவைப்படாது.
6. நீட் தேர்வு இட ஒதுக்கீட்டைப் பாதிப்பதில்லை. ஆகவே இதனால், சமூக நீதி பாதிக்கப்படாது.
7. உச்ச நீதிமன்றமே நீட் தேர்வு தேவை என சொல்லிவிட்டது.

நீட் தேர்வுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட வாதங்கள்

1. நீட் தேர்வு வந்த பிறகு மாநிலக் கல்வி வாரியத்தின் கீழ் படித்த மாணவர்கள் மருத்துவக் கல்வியில் சேர்வது குறைந்திருக்கிறது.
2. மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளுமளவுக்கு மன அழுத்தத்தை நீட் தேர்வு ஏற்படுத்துகிறது. 12 ஆண்டுகள் படித்த படிப்பை இந்தத் தேர்வு புறக்கணக்கிறது. மேலும், இந்தியாவில் பல்வேறு பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்கள் உள்ள நிலையில்,பொருளாதார ரீதியில் மேம்பட்டவர்கள் பெரிதும் படிக்கும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது.
3. நீட் தேர்வு 'கோச்சிங்' மையங்களை ஊக்குவிக்கிறது. கோச்சிங் இல்லாமல் யாரும் தேர்வாக முடியாது. லட்சக் கணக்கில் பணம் செலுத்தி இரண்டு - மூன்று ஆண்டுகளாகவது படிக்க வேண்டும்.
4. தனியார் பள்ளிக்கூடங்களில் 11ஆம் வகுப்பிலேயே நீட் கோச்சிங் வகுப்புகளைத் துவங்கிவிடுகிறார்கள். வசதியான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பெரும் தொகையை இதற்காகச் செலவிடுகிறார்கள்.
நீட் அமலாவதற்கு முந்தைய சில ஆண்டுகளைப்போல் அல்லாமல், நீட் வந்தபின் அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் குடும்ப வருவாய் உள்ள மாணவர்கள் எம்பிபிஎஸ்-இல் சேரும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
5. கிராமப்புறங்களில் இருந்து மருத்துவக் கல்வியைப் படிப்பவர்கள், படித்து முடித்த பிறகு கிராமப்புறங்களில் பணியாற்ற முன்வருவார்கள்.ஆனால், நீட் தேர்வில் தேர்ச்சியடைந்து எம்பிபிஎஸ் முடிப்பவர்கள், கார்ப்பரேட் மருத்துவமனைகளில் பணியாற்றவே விரும்புவார்கள்.
6. நீட் தேர்வு சமூக நீதி, மனிதத்தன்மை, சமத்துவத்திற்கு எதிரானது. பழங்குடியினத்தினர், ஒடுக்கப்பட்ட வகுப்பினர், கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் மருத்துவக் கல்வியில் சேர்வதை நீட் தேர்வு தடுக்கிறது.
7. நீட் மாநில அரசின் உரிமைகளில் தலையிடுகிறது.
8. நீட் தேர்வு அறிமுகமான பிறகு தமிழ்நாடு மாணவர்களுக்கு மருத்துவ உயர் கல்வியில் இடம் கிடைக்கபது வெகுவாகக் குறைந்துவிட்டது.
9. நீட் தேர்வுக்குப் பிறகு, வெளி மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எனப் போலியான சான்றிதழைப் பெற்று மருத்துவ இடங்களைப் பறிக்கிறார்கள்.
10. 3 மணி நேரத்தில் 180 கேள்விகளுக்குப் பதிலளிப்பது என்பது பெரிய அளவில் பயிற்சி இருந்தால்தான் நடக்கும். பயிற்சிபெறாத கிராமப்புற மாணவர்களால் இதை எதிர்கொள்ளவே முடியாது.
ஏ.கே. ராஜன் குழுவின் முடிவுகள்

மேலே சொன்ன புள்ளிவிவரங்களை வைத்து ஏ.கே. ராஜன் குழு சில முடிவுகளை முன்வைத்தது.

1. நீட் தேர்வானது, பலதரப்பட்ட சமூகங்களின் பிரதிநிதித்துவத்தை மருத்துவக் கல்வியில் குலைக்கிறது. சமூகத்தில் வசதியான பிரிவினருக்கு சாதகமாக இருப்பதோடு, பின்தங்கிய நிலையில் இருப்பவர்களின் மருத்துவக் கனவைக் குலைக்கிறது. தமிழ் வழியில் படித்தோர், கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள், அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள், 2.5 லட்ச ரூபாய் வருமானத்திற்கு கீழே உள்ளவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தினர், பழங்குடியினர் ஆகியோர் இந்தத் தேர்வால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

2. நீட் தேர்வானது, மீண்டும் மீண்டும் தேர்வழுதுபவர்களுக்கே சாதகமானதாக இருக்கிறது. முதல் முறை தேர்வெழுதுவோருக்கு பாதகமாக இருக்கிறது.

3. நீட் தேர்வு மாணவர்களிடம் பெரும் அழுத்தத்தையும் பதற்றத்தையும் உருவாக்குகிறது. இந்தத் தேர்வில் நடக்கும் முறைகேடுகள் மாணவர்களிடம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்துகின்றன.

4. தரமான மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர்வதை நீட் தேர்வு உறுதிசெய்யவில்லை. மாறாக குறைவான திறனுள்ள மாணவர்கள் எம்பிபிஎஸ் இடங்களைப் பெறுவதையே உறுதிசெய்கிறது. மாறாக, 12ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கையை நடத்தும்போது தரமான மாணவர்கள் எம்.பி.பி.எஸ். இடங்களைப் பெறுகிறார்கள்.

நீட் தேர்வுக்கு முன்னும் பின்னும் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர விண்ணப்பித்த கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்களின் எண்ணிக்கையைக் காட்டும் தரவுகள்.
5. மருத்துவப் படிப்பில் முதுநிலை இடங்களில் 50 சதவீதத்தையும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பரிவில் 100 சதவீதத்தையும் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு அளிப்பதால், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். இது மாநிலத்தின் மருத்துவக் கட்டமைப்பை குலைக்கிறது. அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படாததால், இது சமூக நீதிக்கு எதிரானது.

6. இந்த பாரபட்சமான நீட் தேர்வினால், மாநிலக் கல்வி வாரியத்தின் கீழ் படிப்பவர்கள் கல்வி முறை மீதே நம்பிக்கை இழக்கிறார்கள்.
7. நீட் தேர்வுக்கு முந்தைய மருத்துவர்கள், பிந்தைய மருத்துவர்கள் என பிரித்துப் பார்த்தால், நீட் தேர்வுக்குப் பிந்தைய மருத்துவர்கள் அனைவரும் வசதியான, நகர்ப்புறங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். அடிமட்ட சமூகத்தின் பல்வேறுவிதமான வித்தியாசங்கள் குறித்த புரிதல் இல்லாமல் இருக்கிறார்கள். இதனை துவக்கத்திலேயே சரிசெய்யாவிட்டால், வருங்காலத்தில் இது மிக மோசமாக எதிரொலிக்கும்.

ஏ.கே. ராஜன் குழுவின் பரிந்துரைகள்
நீட் தேர்வு தொடர்பான பிரச்னையை சரிசெய்ய ஏ.கே. ராஜன் குழு பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
1. நீட் தேர்வை அகற்றுவதற்கான சட்டரீதியான வழிகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும்.
2. 2007ஆம் ஆண்டின் 3வது சட்டத்தைப் போல, மருத்துவக் கல்வியின் அனைத்து நிலைகளிலும் நீட் தேர்வை நீக்குவதற்கான ஒரு சட்டத்தை இயற்றி அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
3. எம்பிபிஎஸ் படிப்பில் சேர்க்கைக்கு 12ஆம் வகுப்புத் தேர்வு மதிப்பெண்களையே அடிப்படையாகக் கொள்ள வேண்டும். பல்வேறு வாரியங்களைச் சேர்ந்த மாணவர்கள் போட்டியிடுவதால், அதனை சமப்படுத்த ஒரு முறையைக் கையாளலாம்.
4. மாணவர்களின் சமூக, பொருளாதார பின்னணி அவர்களின் 12ஆம் வகுப்பு மதிப்பெண்களை வெகுவாகப் பாதிக்கிறது. ஆகவே, அவற்றை அடையாளம் கண்டு சரிசெய்ய வேண்டும். அவர்களை மதிப்பிட "Adversity Score" என்ற முறையைப் பின்பற்ற வேண்டும்.
5. 12ஆம் வகுப்புவரை எல்லா மட்டங்களிலும் மனப்பாடம் செய்து, பயிற்றுவித்து தேர்வடைவதை ஊக்குவிக்காமல், கற்பதை ஊக்குவிக்க வேண்டும்.
6. எல்லா நிகர்நிலை பல்கலைக்கழகங்களையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான சட்டத்தை தமிழக அரசு இயற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

 

Tags :

Share via