குலசேகரன்பட்டினம்  தசரா விழாவுக்கு அனுமதி கோரி  போராட்டம் - பா.ஜ. எம்எல்ஏ கைது

by Editor / 21-09-2021 05:43:48pm
 குலசேகரன்பட்டினம்  தசரா விழாவுக்கு அனுமதி கோரி  போராட்டம் - பா.ஜ. எம்எல்ஏ கைது

 

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் வருகிற அக்.6ம் தேதி தசரா விழா கொடியேற்றம் நடக்கிறது. 10 நாட்கள் நடைபெறும் விழா அக். 16ம் தேதி சூரசம்ஹாரத்துடன் நிறைவு பெறுகிறது. தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்த ஆண்டு தசரா விழாவுக்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தசரா விழாவுக்கு பக்தர்களை காப்பு கட்ட அனுமதிக்கக் கோரியும் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் அருகே பா.ஜ.வினர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் சிவமுருக ஆதித்தன் தலைமையில் உண்ணாவிரதம் இருந்தனர்.
நாகர்கோவில் தொகுதி பா.ஜ. எம்எல்ஏ எம்.ஆர். காந்தி முன்னிலை வகித்தார். இதில் பா.ஜ.வினர் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக மத்திய அரசின் ஆலோசனையின் பேரில் தான் பொதுமக்கள் கூடும் திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி உண்ணாவிரதத்தை வாபஸ் பெற வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகள் உண்ணாவிரதம் இருந்தவர்களிடம் வலியுறுத்தினர். அதை போராட்டக்காரர்கள் ஏற்காததால், பா.ஜ. எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி உள்பட அனைவரும் கைது செய்யப்பட்டு, அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

 

Tags :

Share via