பறி போகும் பத்திரிகை சுதந்திரம் !

by Editor / 24-07-2021 08:56:50pm
பறி போகும் பத்திரிகை சுதந்திரம் !

மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றது முதல் பத்திரிகை மீது கடும் தாங்குதல் நடக்கிறது. சுதந்திரம் பறிக்கப்படுகிறது என தொடர் சர்ச்சைகள் எழுந்துள்ளன. அதை மெய்ப்பிக்கும் வகையில் பல சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த வகையில் தற்போது வெளிவந்துள்ள ஒருஆய்வு திடுக்கிட வைத்துள்ளது.

உலக நாடுகளின் பத்திரிக்கை சுதந்திரத்துக்கான தரவரிசை பட்டியலில் இந்தியா 142வது இடத்தில் மிக மோசமான நிலையில் உள்ளதாக “எல்லைகளற்ற பத்திரிக்கையாளர்கள் என்ற அமைப்பு ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.உலகளவில் 180 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியா 142வது இடத்தில், பத்திரிகை சுதந்திரத்தில் மிக மோசமான நிலையில் உள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்து தேசியம் குறித்து பேசக்கூடிய இந்துத்துவ அமைப்பினர் மீது பொது வெளியில் கேள்வி எழுப்பக்கூடிய பத்திரிகையாளர்களைத் தேச துரோகிகளாக சித்தரிப்படுவதாகவும், அவர்கள் இந்துத்துவ அமைப்பினரால் மிரட்டப்படுவதாகவும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அரசுக்கு எதிராகக் கேள்வியெழுப்பும் பத்திரிகையாளர்கள் தேச துரோகிகளாகச் சில சமயங்களில் பயங்கரவாதிகளாகப் பாரதீய ஜனதா கட்சியின் ஆதரவாளர்களால் கூறப்படுவதாகவும், குறிப்பாக அவர்கள் பெண்களாக இருப்பின் அவர்கள்குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதாகவும், தொலைபேசி வழியாக மிரட்டுவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

இதேபோலக் களத்தில் தகவல் சேகரிக்க செல்லும் பத்திரிகையாளர்கள் பாஜக தொண்டர்களால் தாக்கப்பட்டுள்ளதாகவும் , பெரும்பாலும் காவல்துறை அதற்கு உடந்தையாகச் செயல்பட்டதாகவும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், பத்திரிகைகளின் ட்விட்டர் கணக்குகள் கூட கடுமையான தணிக்கைக்கு உள்ளானதாகவும், மறுபரிசீலனை செய்யக்க்கூட வாய்ப்பளிக்கவில்லை என்றும் அந்த ஆய்வறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது. இப்படி பத்திரிகைகள் மீது பாஜக அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை நிரூபிக்கும் வகையில் மத்திய பிரதேசத்தைத் தலைமையிடமாகக் கொண்ட டைனிக் பாஸ்கர் குழுமம், நாட்டின் மிகப்பெரிய ஊடகக் குழுமங்களில் ஒன்றாகும். பல மொழிகளில் 60 க்கும் மேற்பட்ட பதிப்புகள் வெளியாகி வருகிறது.

இந்தி மொழியில் அதிகம் விற்பனைக்குள்ளாகும் நாளிதழிலான டைனிக் பாஸ்கர் தனது இணையதளத்தில், “கொரோனா தொற்று காலத்தில் கங்கை நதியில் மிதக்கும் சடலங்கள் குறித்து தொடர்ந்து செய்திகள் வெளியிட்டதால், டைனிக் பாஸ்கர் குழு மீது அரசு இதுபோன்ற சோதனைகளை நடத்தி வருகிறது. எங்கள் அலுவலகங்கள் மட்டுமின்றி, குழுமத்தின் முக்கிய நபர்களின் வீடுகளிலும் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது. சோதனை அதிகாரிகள் எங்கள் ஊழியர்களின் அலைப்பேசிகளை கைப்பற்றியுள்ளனர். ஒரு பெண் வருமானவரித்துறை அதிகாரி கூட இச்சோதனைகளில் இடம் பெறவில்லை.” என்று தெரிவித்துள்ளது. இப்படி தொடர்ந்து  பத்திரிகை மீது தாக்குதல் நடத்துவது கண்டிக்கத்தக்கது

 

Tags :

Share via