சென்னை வரும் அமித்ஷா... எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க திட்டம்

by Editor / 09-04-2025 03:31:07pm
சென்னை வரும் அமித்ஷா... எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க திட்டம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை இரவு தமிழ்நாட்டிற்கு வர இருக்கிறார். இரு நாள் பயணமாக திட்டமிடப்பட்டுள்ள இந்தப் பயணத்தில் அவர் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கிறார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் தேர்தல் வேலைகளை தற்போதே துவங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாக இந்திய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமைக் கட்சியாக உள்ள பாஜக தமிழ்நாட்டில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பாக ஆலோசிக்க அக்கட்சியின் மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வரவிருக்கிறார்.

நாளை இரவு 10.30 மணிக்கு சென்னை வரும் அமித்ஷா மறுநாள் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ்நாடு அரசியல் கட்சியின் தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு பாஜகவின் முக்கிய நிர்வாகிகளைச் சந்திக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

 

Tags :

Share via