உதயநிதி ஸ்டாலின் உடன் நடிகர் வடிவேலு திடீர் சந்திப்பு

by Editor / 22-09-2021 09:23:17am
உதயநிதி ஸ்டாலின் உடன் நடிகர் வடிவேலு திடீர்  சந்திப்பு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடிகர் வடிவேலு மீது இயக்குநரும், 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' படத்தின் தயாரிப்பாளருமான ஷங்கர் புகார் அளித்திருந்தார். இதனால் நடிகர் வடிவேலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் தரப்பில் 'ரெட் கார்ட்' கொடுக்கப்பட்டு இருந்தது.

இதனால் படங்களில் நடிக்காமல் இருந்தார் வடிவேலு. இதனால் 4 ஆண்டுகளுக்கு மேலாக வடிவேலு மீம்ஸ்கள் மக்களை சிரிக்க வைத்து வந்தது. ஆனால் தற்போது இந்த பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, வடிவேலு மற்றும் லைகா நிறுவனத்திற்கு இடையே சமாதானம் செய்யபட்டது. அதோடு அவர் தமிழ் திரைப்படங்களில் நடிக்க இனி எந்த தடையும் இல்லை என அவருக்கு கொடுக்கப்பட்ட 'ரெட் கார்ட்' நீக்கம் செய்யப்பட்டது.

இதையடுத்து, புது உற்சாகத்தில் மீண்டும் திரைப்பிரவேசத்துக்கு வடிவேலு தயாராகி வருகிறார். தொடக்கமாக சுராஜ் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் தயாராகும் திரைப்படத்தில் வடிவேலு நடிக்கவுள்ளார். இது தொடர்பாக அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த வடிவேலு, தமிழக முதல்வரை பாத்துட்டு வந்ததுல இருந்து எனக்கு நேரம் ரொம்ப நல்லாருக்கு. தமிழக மக்களுக்கும் நேரம் நல்லாருக்கு. தனக்கு எண்ட் கார்டு கிடையாது என்றும் உற்சாகமாக பதிலளித்தார்.

ஆனால், வடிவேலுக்கும் திமுகவுக்கும் ஒரு கசப்பமான தொடர்பும் உண்டும். அதாவது திமுகவின் நட்சத்திர பேச்சாளராக 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வலம் வந்தார் நடிகர் வடிவேலு. ஆனால் அந்த தேர்தலில் திமுக எதிர்க்கட்சி அந்தஸ்து கூட பெற முடியாத சூழல் ஏற்பட்ட பிறகு அவர் அரசியலில் இருந்து முற்றிலும் விலகி அமைதியாக இருந்தார். குறிப்பாக அதன் பிறகு அவருக்கு பட வாய்ப்பும் வெகுவாக குறையத் துவங்கியதும் அப்போதுதான் என சினிமாவுலகம் அறிந்திருக்கும்.

இதனிடையே, 2 மாதங்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்த நடிகர் வடிவேலு முதலமச்சரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கினார்.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனும், நடிகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நடிகர் வடிவேலு சந்தித்து பேசியுள்ளார். இருவரும் நட்பு ரீதியாக சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

Tags :

Share via