பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயலாற்றுங்கள் ஸ்டாலின் உத்தரவு

by Editor / 24-09-2021 03:53:15pm
பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயலாற்றுங்கள் ஸ்டாலின் உத்தரவு

 

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து துரிதமாக செயல்பட வேண்டும் என்று அதிகாரிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில், வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முதலமைச்சர் பேசியதாவது:
வடகிழக்குப் பருவ மழைக்காலம் துவங்க உள்ளதை முன்னிட்டு அதன் காரணமாகப் பொதுமக்களின் உயிர்களுக்கும், உடமைகளுக்கும், பயிர்களுக்கும் பாதிப்பு இல்லாத வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது குறித்து விவாதிப்பதற்காக, கலந்து பேசுவதற்காக, நாம் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காக இந்தக் கூட்டத்தை நாம் கூட்டியிருக்கிறோம்.
‘நீரின்றி அமையாது உலகு!’ என்ற கூற்றின்படி, நீர் எந்த அளவுக்கு இன்றியமையாததோ, அதேசமயம் சில நேரங்களில் நீரினால் பாதிப்பு ஏற்படக்கூடிய அசாதாரணமான சூழ்நிலையையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன். ஒரு நல்ல நிர்வாகத்திற்குச் சான்றாக விளங்குவது இப்படிப்பட்ட காலங்களில் அது எந்த அளவிற்கு தனது குடிமக்களின் உயிர்களுக்கும், உடமைகளுக்கும், கால்நடை, பயிர் வகைகளுக்கும் சேதம் இல்லாமல் காப்பாற்றி கொண்டு செல்கிறது என்பதை பொருத்தே அமைகிறது.
ஆகவே, புயல் வெள்ள காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திட்டமிட்டு, முறையாக எடுத்து அனைத்துத்தரப்பு மக்களும், குறிப்பாக ஏழை எளிய மக்கள், அதைவிட குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் குடிசைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதிப்புக்கு ஆளாகாத வகையில், நீங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். பேரிடர் காலங்களில் அரசுத் துறைகள் தனித்தனியாக இயங்காமல் ஒன்றாக இணைந்து ஒரே நோக்கத்தோடு, மக்கள் துயர் நீக்கம் என்ற ஒரே நோக்கத்தோடு இயங்க வேண்டியது மிகமிக அவசியமானது ஆகும்.தமிழ்நாட்டின் பூகோள அமைப்பானது அடிக்கடி சூறாவளி, புயல், வெள்ளப்பெருக்கு, வறட்சி ஆகியவற்றின் பாதிப்புகளுக்கு உள்ளாகக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது.தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களைத் தவிர்த்து பெரும்பாலான மாவட்டங்களில் தென்மேற்குப் பருவ மழை பொழிந்தாலும் கூட, அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை இது நீடிக்கும். வடகிழக்கு பருவமழைக் காலத்தில் தமிழ்நாட்டிற்கு, 448.0 மி.மீட்டர் மழை இயல்பாக கிடைக்கப் பெற்றது. இது தமிழ்நாட்டின் வருடாந்திர இயல்பான மழை அளவில், 47.32 விழுக்காடு ஆகும்.
இப்பணியில், மாநில அரசின் துறைகள் மட்டுமல்லாமல், தேவைக்கேற்ப, ராணுவம், விமானப்படை, கடற்படை, கடலோரக் காவல் படை, இந்திய வானிலை ஆய்வு மையம், ஒன்றிய நீர்வள ஆணையம், தேசிய பேரிடர் மீட்பு படை உள்ளிட்ட ஒன்றிய அரசுத் துறைகள் மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

 

Tags :

Share via