தமிழக மீனவர்கள் மீது கம்பு, இரும்பு  கம்பியால் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

by Editor / 25-09-2021 05:57:57pm
தமிழக மீனவர்கள் மீது கம்பு, இரும்பு  கம்பியால் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

 


நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா ஆறுகாட்டுத்துறையை சேர்ந்தவர் சின்னதம்பி. இவரது மகன்கள் சிவா(34), சிவக்குமார்(32). மீனவர்கள். சிவக்குமார் சொந்தமாக பைபர் படகு வைத்துள்ளார். சிவக்குமார் தனக்கு சொந்தமான படகில், தந்தை சின்னதம்பி, அண்ணன் சிவா ஆகியோருடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார்.
இவர்கள் வெள்ளிக்கிழமை  நள்ளிரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே 20 நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு பைபர் படகில் இலங்கை கடற்கொள்ளையர்கள் 5 பேர் வந்தனர். அவர்கள் திடீரென சிவக்குமாரின் படகில் ஏறி அங்கிருந்த 3 பேரையும் கம்பு, இரும்பு கம்பியால் தாக்கினர். மேலும் சிவக்குமாரின் தலையில் அரிவாளால் வெட்டினர். பின்னர் படகிலிருந்த 400 கிலோ வலை மற்றும் மீன்கள், உபகரணங்களை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
கத்தியால் வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த சிவக்குமாரை, காயமடைந்த மற்ற 2 பேரும் இன்று அதிகாலை 5.45 மணிக்கு ஆறுகாட்டுத்துறைக்கு அழைத்து வந்தனர். பின்னர் 3 பேரும் வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு சிவக்குமாருக்கு தலையில் 15 தையல் போடப்பட்டது. முதலுதவி சிகிச்சைக்கு பின், மேல் சிகிச்சைக்காக 3 பேரும் நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அவர்கள் அளித்த புகாரின்பேரில் வேதாரண்யம் கடலோர காவல் படை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இதே படகை கடந்த 1ம் தேதி கடற்கொள்ளையர் தாக்கி வலைகளை பறித்துச்சென்றனர். அப்போது படகிலிருந்து குதித்த சிவக்குமார் நீந்தியே கரை வந்து சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.
மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அறிந்த ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் கொந்தளிப்பில் உள்ளனர். இதை கண்டித்தும், தமிழக மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர் தாக்குவதை தடுத்து நிறுத்த கோரியும் ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் சுமார் 5,000 பேர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

Tags :

Share via