இயந்திரங்கள் மூலம் ரயில் பயண சீட்டு விற்பனை 50 சதவீதம் உயர்வு

by Staff / 03-10-2023 05:10:01pm
இயந்திரங்கள் மூலம் ரயில் பயண சீட்டு விற்பனை 50 சதவீதம் உயர்வு

மிலடி நபியை தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கால கடைசி நாளான நேற்று ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்தது. பயணிகள் நீண்ட வரிசைகளில் நின்று பயணச்சீட்டுகள் பெற்று சென்றனர். வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க விரும்பிய பயணிகள் தானியங்கி பயணச்சீட்டு இயந்திரங்களை பயன்படுத்தி விரைவாக பயணச்சீட்டு பெற்றனர். நேற்றைய தினம் இயந்திரங்கள் மூலம் பயண சீட்டு விற்பனை 50% அதிகரித்துள்ளது. நேற்று மதுரையில் இருந்து 4691 பயணிகள்,  திருநெல்வேலியில் இருந்து 4044 பயணிகள், திருச்செந்தூரில் இருந்து 2514 பயணிகள்,  காரைக்குடியில் இருந்து 1539 பயணிகள், திண்டுக்கல்லில் இருந்து 1401 பயணிகள்,  கோவில்பட்டியில் இருந்து 1254 பயணிகள்,  ராமநாதபுரத்தில் இருந்து 1469 பயணிகள்,  செங்கோட்டையிலிருந்து 1569 பயணிகள்,  ராஜபாளையத்தில் இருந்து 1057 பயணிகள்,  விருதுநகரில் இருந்து 1448 பயணிகள் தானியங்கி பயணச்சீட்டு இயந்திரம் மூலம் பயண சீட்டு பெற்று பயணம் செய்துள்ளனர். இது போல அம்பாசமுத்திரம், மானாமதுரை, புதுக்கோட்டை, பழனி, பரமக்குடி, சங்கரன்கோவில், சாத்தூர், தூத்துக்குடி, தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் இருந்தும் இயந்திரங்கள் மூலம் பயண சீட்டு பெற்று பயணிகள் பயணித்துள்ளனர். இது பற்றி ஈரோட்டைச் சேர்ந்த பயணி முத்து இயந்திரம் மூலம் பயண சீட்டு பெறுவது மிகவும் எளிதாக உள்ளது என பாராட்டு தெரிவித்தார். மேலும் அவர், இயந்திரத்திரையில் நாம் செல்ல வேண்டிய ரயில் நிலையத்தின் பெயரை "வரைபடத்தை தேர்ந்தெடு" பகுதியை தொட்டோ அல்லது "இதர ரயில் நிலையங்கள்" பகுதியை தொட்டோ தேர்ந்தெடுக்கலாம். பின்பு நாம் செல்ல வேண்டிய வழியை தேர்ந்தெடுக்கலாம். "பயண விபரத்தை மாற்ற" பகுதியை தொட்டு பயணிகளின் எண்ணிக்கை 4 வரை மாற்றிக் கொள்வது, எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட், அந்தியோதயா என ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து கொண்டு "பணம் செலுத்து" பகுதியை தொடலாம். பின்பு "கியூ ஆர் கோட்" பகுதியைத் தொட்டு நமது மொபைல் போன் மூலம் அந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்து பணம் செலுத்தி எளிதாக பயணச்சீட்டு பெற முடிகிறது என்றார். விரைவு புக்கிங் பகுதியை தொட்டு பிளாட்பாரம் டிக்கெட் எளிதாக பெற முடிகிறது என்றார். மேலும் சீசன் டிக்கெட்டு புதுப்பித்தல் ஸ்மார்ட் கார்டு ரீசார்ஜ் செய்தல், பிளாட்பாரம் டிக்கெட் பெறுதல், செயலி மூலம் பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டை ("மொபைல் எண் பயணச்சீட்டு" பகுதி) அச்சிட்டு கொள்வது போன்ற வசதிகளும் இதில் உள்ளன என்றார்.

 

Tags :

Share via