நீதிமன்ற உத்தரவை மீறி அதிக அளவில்  பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன” - நீதிபதிகள் கவலை

by Editor / 28-09-2021 05:48:00pm
நீதிமன்ற உத்தரவை மீறி அதிக அளவில்  பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன” - நீதிபதிகள் கவலை

 


பட்டாசு வெடிக்கும் நேரத்தை தளர்த்தக் கோரி தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில்  விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘பேரியம்’ ரசாயணத்திற்கு தடை விதித்து, சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை மீறி 300 வகையான பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படுவதாகவும், இது நீதிமன்ற அவமதிப்பு என்றும் தெரிவித்தார்.


மேலும் இது தொடர்பாக ஏற்கனவே சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டு, அந்த வழக்கு தற்போது வரை நிலுவையில் உள்ளது என்று குறிப்பிட்ட அவர், தடை செய்யப்பட்ட ரசாயண பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் குறித்து மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன என்றும் இவற்றைத் தடுக்க மத்திய அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.


பட்டாசு உற்பத்தி ஆலைகளில் குழந்தை தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன என்று தெரிவித்த அவர், பட்டாசு உற்பத்தியாளர்களுடன் கூட்டு சேர்ந்து மறைமுகமாக பேரியத்தை அனுமதித்து, பசுமை பட்டாசு உற்பத்தி என்ற முறையை சீர்குலைத்து, ரசாயண பட்டாசு உற்பத்தியை மத்திய அரசு ஊக்குவிக்கிறது என்று மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.


இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பிறகும் ஒவ்வொரு நாளும் மத நிகழ்வுகள், அரசியல் நிகழ்வுகள், தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் மிக அதிக அளவிலான பட்டாசுகள் பயன்படுத்தப்படுவதாக நீதிபதிகள் கவலை தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து  நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

 

Tags :

Share via