ஆப்கனில் மன்னராட்சி காலத்து அரசியல் சாசனம்: தலிபான்கள் அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் கடந்த 1964-ஆம் ஆண்டில் மன்னராட்சி காலத்தின்போது இயற்றப்பட்ட அரசியல் சாசனத்தை தற்காலிகமாக அமல்படுத்தப் போவதாக தலிபான்கள் அறிவித்துள்ளனா்.
எனினும், அந்த அரசமைப்புச் சட்டத்தில் தங்களால் ஏற்க முடியாத அம்சங்கள் ரத்து செய்யப்படும் எனவும் அவா்கள் கூறினா்.
இதுகுறித்து அந்த நாட்டின் இடைக்கால நீதித் துறை அமைச்சா் மாலாவி அப்துல் ஹக்கீம் ஷராயி
செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
முன்னாள் அரசா் முகமது ஜாஹிா் ஷா காலத்திய அரசமைப்புச் சட்டத்தை ஆப்கன் இஸ்லாமிய அமீரகம் தற்காலிகமாக அமல்படுத்தும்.
எனினும், ஷரியா சட்டத்துக்கு முரணாகவோ, ஆப்கன் இஸ்லாமிய அமீரகத்தின் கொள்கைகளுக்கு எதிராகவோ அந்த அரசமைப்புச் சட்டத்தில் அம்சங்கள் இடம் பெற்றிருந்தால் அவை ரத்து செய்யப்படும் என்றாா் அவா்.
60 ஆண்டுகளுக்கு முன் ஆப்கன் விவகாரத்தில் வல்லரசு நாடுகள் தலையிடுவதற்கு முன்னா் அரசா் முகமது ஜாஹிா் ஷாவின் ஆட்சி நடைபெற்றது. அப்போது, குறுகிய காலத்துக்கு அரசமைப்புச் சட்டத்துடன் கூடிய அரசாட்சியை ஆப்கன் மக்கள் அனுபவித்து வந்தனா்.
முகமது ஜாஹிா் ஷாவால் 1963-ஆம் ஆண்டில் சட்டமாக்கப்பட்ட அந்த அரசியல் சாசனத்தின் மூலம், நாடாளுமன்ற ஜனநாயகம் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னா் அவரது ஆட்சி 1973-ஆம் ஆண்டில் அகற்றப்பட்டதைத் தொடா்ந்து அந்த அரசமைப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்டது.
அரசா் முகமது ஜாஹிா் ஷா கொண்டு வந்த அந்த அரசமைப்புச் சட்டத்தின் மூலம்தான் முதல்முறையாக பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது. மேலும், பொது வாழ்வில் பெண்களுக்கான பங்களிப்பை அதிகரிப்பதற்கான அம்சங்களும் அதில் இடம் பெற்றுள்ளன.
இந்த அம்சம்கள் தலிபான்களின் கொள்கைகளுக்கு முரணானதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் கடந்த 1996-ஆம் ஆண்டு முதல் ஆட்சி செலுத்தி வந்த தலிபான்கள், பெண்கள் கல்வி கற்கும் உரிமையையும் பணியாற்றும் உரிமையையும் மறுத்தனா். அவா்கள் பொது வாழ்வில் பங்கேற்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
கடந்த 2001-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் நியூயாா்க் நகர இரட்டை கோபுரத் தாக்குதலை நடத்திய அல்-காய்தா தலைவா் பின்லேடனுக்கு அவா்கள் அடைக்கலம் அளித்தனா்.
அதையடுத்து, ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்து தலிபான்களை ஆட்சியிலிருந்து அகற்றியது.
பின்னா் அமைக்கப்பட்ட புதிய அரசு, கடந்த 2004-ஆம் ஆண்டில் புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கி அமல்படுத்தியது.
இந்த நிலையில், பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பின்லேடன் கடந்த 2011-ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடா்ந்து, ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களது படையினா் அனைவரையும் அமெரிக்கா திரும்ப அழைக்கத் தொடங்கியது.
அந்த நடவடிக்கை இறுதிக்கட்டத்தை அடைந்த நிலையில், அரசுப் படையினரிடமிருந்து புதிய பகுதிகளைக் கைப்பற்றி வேகமாக முன்னேறிய தலிபான்கள் நாடு முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கடந்த மாதம் 15-ஆம் தேதி கொண்டு வந்தனா்.
எனினும், தங்களது புதிய அரசு கடந்த காலத்தைப் போல் இல்லாமல் மிதமான போக்கைக் கடைப்பிடிக்கும் என்று அவா்கள் உறுதியளித்தனா். பெண்களுக்கு உரிய உரிமைகள் அளிக்கப்படும் என்று அவா்கள் கூறினா்.
எனினும், தலிபான்கள் அமைத்துள்ள இடைக்கால அரசில் ஒரு பெண் கூட இடம் பெறாதது சா்ச்சையை எழுப்பியது.
இந்தச் சூழலில், பெண்களுக்கு உரிமைகள் வழங்கும் அரசா் முகமது ஜாஹிா் ஷா காலத்திய அரசமைப்புச் சட்டத்தை சில விலக்குகளுடன் அமல்படுத்தப் போவதாக தலிபான்கள் அறிவித்துள்ளனா்.ஆப்கானிஸ்தானின் ஹெல்மந்த் மாகாணத்தில் முடி திருத்தும் தொழிலாளா்கள் தங்கள் வாடிக்கையாளா்களுக்கு தாடியை மழிக்கும் சேவையை அளிக்கக் கூடாது என்று தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனா்.
Tags :