கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றி வருகிறது - கனிமொழி எம்.பி
தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றி வருவதாக திமுக எம்.பி கனிமொழி தெரிவித்தார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 500 வாக்குறுதிகளைக் கொடுத்து இருந்தது. அதில் முக்கியமான பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, ஆவின் பால் விலை குறைப்பு, மகளிருக்கு பேருந்தில் இலவசம், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதுவரை 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருப்பதாக முதல்வர் மு.க ஸ்டாலின் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதனை விமர்சித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 202 வாக்குறுதிகளை நிறைவேற்றுவது போல் தெரியவில்லை. திமுக அரசு மக்களை ஏமாற்றுகிறது. நிறைவேற்றிய திட்டங்களை பட்டியல் போட்டு காட்டுங்கள் என தெரிவித்திருந்தார். அதேபோல மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என தெரிவித்திருந்தார். இவ்வாறு திமுகவின் வாக்குறுதிகள் குறித்து விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதாக திமுக எம்பி கனிமொழி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக முதல்வர் மு.க ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார். ஆட்சிக்கு வந்ததும் கொரோனா நிவாரண நிதியாக நான்காயிரம் ரூபாய் அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டது. பெண்கள் கட்டணமின்றி பேருந்துகளில் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் பல்வேறு திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி இருக்கிறார். இந்த பகுதியிலும் அரசு கலைக் கல்லூரிக்கு 11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடையம் பகுதியில் அறநிலையத்துறை சார்பில் கல்லூரி அமைக்க 14 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று பேசினார். மேலும், உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற நிர்வாகிகள் பாடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
Tags :