பழனி அரசு மருத்துவமனை: திடீர் புகை; ஆக்ஸிஜன் குழாய் வெடித்ததாக வதந்தி

by Editor / 30-09-2021 10:53:59am
பழனி அரசு மருத்துவமனை: திடீர் புகை; ஆக்ஸிஜன் குழாய் வெடித்ததாக வதந்தி

பழனி நகரின் மையப்பகுதியில் பழனி அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனை வளாகத்தில் அவசரச் சிகிச்சை பிரிவு, சித்தா பிரிவு, தாய், சேய் நலப்பிரிவு, மகப்பேறு மற்றும் புறநோளிகள் பிரிவு, கொரோனா பிரிவு மற்றும் ரத்த வங்கி ஆகியவைக்களுக்கு தனித்தனியாக கட்டடங்கள் உள்ளன. இதில் மகப்பேறு பிரிவு 70 படுக்கைகளுடன் இயங்கி வருகிறது. இந்நிலையில் புதன்கிழமை பகல் 12 மணி அளவில் மின்கம்பத்தில் இருந்து கட்டடத்திற்குள் வரும் இணைப்புப் பகுதியில் ஷார்ட் சர்க்கியூட் ஏற்பட்டுள்ளது. இதில் சிறிய அளவில் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து கட்டடத்திற்குள் ஆக்ஸிஜன் குழாய் வெடித்துவிட்டதாக வதந்தி பரவியது. இதனால் வார்டில் இருந்த கர்ப்பிணிகள், தாய்மார்கள் மற்றும் பச்சிளங்குழந்தைகளுடன் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். ஒரே நேரத்தில் அனைவரும் வெளியேறியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் கட்டடத்தின் பின்பக்க நுழைவுவாயில் கண்ணாடி கதவு உடைந்தது.

இதற்கிடையே கட்டடத்தில் இருந்த தீத்தடுப்பு உபகரணங்கள் கொண்டு தீ ஏற்படாமல் தடுக்கப்பட்டது. மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்களும் விரைந்து வந்து மின்இணைப்புகளை சரிசெய்தனர்.இதையடுத்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு வார்டில் இருந்து வெளியேறிய கர்ப்பிணிகள், தாய்மார்கள் பாதுகாப்பாக உள்ளே அழைத்துவரப்பட்டனர்.`மகப்பேறு பிரிவு கட்டடத்தில் போதிய படுக்கை வசதி இல்லாததால், கர்ப்பிணிகள், தாய்மார்கள் படுக்கையின்றி கீழே படுக்கும் நிலை உள்ளது. படுக்கைகள் 70 இருந்தாலும், இங்கு கூடுதலான பொது மக்களுக்கு மருத்துவம் பார்க்கப்பட்டு வருகிறது. இத்தகையைச் சூழலில் தீ விபத்து போன்ற அசம்பாவிதங்கள் நடத்தால் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும். எனவே தாய், சேய் நலப்பிரிவுக்கு கூடுதல் கட்டடம் அமைக்க வேண்டும் எனவும், மருத்துவமனையை முறையாகப் பராமரிக்க வேண்டும்' எனவும் பழனி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

 

Tags :

Share via