மேகாலயா: 13 எம்.எல்.ஏக்கள்  கூண்டோடு விலக முடிவு!

by Editor / 01-10-2021 03:54:51pm
 மேகாலயா: 13 எம்.எல்.ஏக்கள்  கூண்டோடு விலக முடிவு!

 


 மேகாலயா மாநில முன்னாள் முதல்வர் முகுல் சங்கா, 13 எம்.எல்.ஏக்களுடன் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


காங்கிரஸ் கட்சி சற்று செல்வாக்கு உள்ள மாநிலங்கள் அனைத்திலும் அக்கப்போர்தான். மத்திய பிரதேசம், பஞ்சாப், சத்தீஸ்கர் என ஒவ்வொரு மாநில காங்கிரஸும் இருப்பை தொலைத்துக் கொண்டே இருக்கிறது.


பஞ்சாப் காங்கிரஸில் வெடித்த உட்கட்சி மோதல் உச்சத்தில் இருக்கிறது. அம்மாநில முதல்வராக இருந்த அமரீந்தர்சிங் பதவி பறிக்கப்பட்டது. இதனால் கோபத்தில் இருக்கும் அமரீந்தர்சிங் காங்கிரஸை விட்டு வெளியேறப் போவதாக அறிவித்துள்ளார். மேலும் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்தார். 


 கோவாவில் முன்னாள் முதல்வர் லூய்சின்ஹோ பலேரோ காங்கிரஸில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார். கோவாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் காங்கிரஸ் மேலிடத்துக்கு எதிராக கட்சியின் மூத்த தலைவர்களின் அதிருப்தி குரல் வலுவாக ஒலித்து வருகிறது. காங்கிரஸ் மேலிடத்துக்கு எதிரான இந்த அணியில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரமும் இணைந்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் செயற்குழுவை உடனே கூட்ட வேண்டும் என்பது அதிருப்தி தலைவர்களின் ஒருமித்த குரல். காங்கிரஸ் கட்சிக்கான புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் வலிமையாக இருக்கும் மேகாலயாவில் கூண்டோடு திரிணாமுல் காங்கிரஸ் இணைய முடிவெடுத்துள்ளனர் அம்மாநில எம்.எல்.ஏக்கள். 2018-ல் நடைபெற்ற மேகாலயா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 21 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது. ஆனால் 20 இடங்களில் வென்ற தேசிய மக்கள் கட்சி- என்.பி.பி., பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து ஆட்சியை அமைத்தது. 


தற்போது மேகலாயாவில் முன்னாள் முதல்வர் முகுல் சங்மா மற்றும் 13 எம்.எல்.ஏக்கள் காங்கிரஸில் இருந்து விலகுவது என முடிவெடுத்துள்ளனர். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அனைவரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைய தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில வாரங்களுக்கு முன்னர் திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜியை முகுல் சங்மா சந்தித்து பேசியிருந்தார். 

 

Tags :

Share via