பொள்ளாச்சி அருகே 5 மாத குழந்தையை கடத்தி விற்பனை - மூவர் கைது

பொள்ளாச்சி அருகே மைசூரை சேர்ந்த தம்பதியின் 5 மாத பெண் குழந்தையை கடத்தி விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆனைமலை முக்கோணம் பேருந்து நிறுத்தம் அருகே கடந்த 28ஆம் தேதி இரவு, மைசூரைச் சேர்ந்த மணிகண்டன் - சங்கீதா தம்பதியினரின் 5 மாத பெண் குழந்தையை மர்மநபர் ஒருவர் கடத்திச் சென்றார். இதுகுறித்து, குழந்தையின் பெற்றோர் புகாரின் பேரில், ஆனைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும், மாவட்ட எஸ்.பி செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில், ஆனைமலை போலீசார் தனிப்படை அமைத்து சிசிடிவி காட்சி அடிப்படையில் குழந்தையை கடத்திய நபரை தேடி வந்தனர்.
இந்த நிலையில், கடத்தப்பட்ட குழந்தை அங்கலக்குறிச்சியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல்கிடைத்தது. அதன் பேரில் நேற்றிரவு அங்கு சென்ற தனிப்படை போலீசார் குழந்தையை மீட்டனர். மேலும், குழந்தை கடத்தல் சம்பவம் தொடர்பாக , அங்கலக்குறிச்சி ஜே.ஜே நகரை சேர்ந்த ராமர்(45) , சேத்துமடையை சேர்ந்த முருகேஷ் ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், அங்கலக்குறிச்சியை சேர்ந்த முத்துப்பாண்டி- கற்பகம் தம்பதியினருக்கு திருமணமாகி 20 ஆண்டுகளாக குழந்தைகள் இல்லாததை அறிந்த இருவரும், முத்துப்பாண்டிக்கு குழந்தையை விலைக்கு வாங்கி தருவதாக கூறியுள்ளனர். இதள்காக ஆனைமலை முக்கோணம் பேருந்து நிலையம் பகுதியில் இருவரும் நோட்டமிட்டிருந்தபோது மணிகண்டன் தம்பதி அங்கு வந்துள்ளனர். அப்போது, குழந்தையை கடத்தி, அதனை ரூ.1 லட்சத்துக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதனை அடுத்து, குழந்தையை கடத்திய ராமர், முருகேசன் மற்றும் அதனை விலைக்கு வாங்கிய முத்துப்பாண்டி ஆகிய 3 பேரை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :