கர்நாட காவில் தண்டவாளத்தில் தலை  துண்டிக்கப்பட்டுக் கிடந்த இஸ்லாமிய இளைஞர்

by Editor / 04-10-2021 04:57:04pm
 கர்நாட காவில் தண்டவாளத்தில் தலை  துண்டிக்கப்பட்டுக் கிடந்த இஸ்லாமிய இளைஞர்

 


கர்நாடக மாநிலம், ஆஸம் நகரைச் சேர்ந்தவர் அர்பாஸ் முல்லா. கடந்த 27ஆம் தேதி வேலைக்குச் சென்ற இவர் அதன் பிறகு வீட்டிற்குத் திரும்பவில்லை. இதையடுத்து உறவினர்கள் பல இடங்களில் தேடியும் இவர் தொடர்பான எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.


இதனால் அர்பாஸ் முல்லாவை காணவில்லை என அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். வழக்குப் பதிவு செய்த போலிஸார் அவரைத் தேடி வந்தனர். இதையடுத்து கடந்த 29ஆம் தேதி கானாப்புரா பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபர் சடலம் கிடப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்தது.பிறகு அங்கு சென்ற போலிஸார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இறந்தவர் காணாமல் போன அர்பாஸ் முல்லாதான் என அவரது உறவினர்கள் அடையாளம் காட்டினர். இதையடுத்து அவரை யாராவது கொலை செய்தார்களா அல்லது ரயிலில் தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில், தனது மகனை இந்துத்துவா அமைப்பினர் கொலை செய்துள்ளதாக அவரது தாயார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இவரின் அந்த புகாரில், “எனது மகன் இந்து மதத்தைச் சேர்ந்த பெண்ணை ஒரு வருடமாகக் காதலித்து வந்தான்.
இதனை அறிந்த இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்து பெண்ணை காதலிக்கக் கூடாது என மிரட்டினர். அப்போது நான் காதலிப்பேன் என அவர்களிடம் தெரிவித்தான். இதனால் எனது மகனை அவர்கள் திட்டமிட்டு கொலை செய்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.


இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக போலிஸார் இது வரை யாரும் கைது செய்யவில்லை எனவும் அர்பாஸ் முல்லாவின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

 

Tags :

Share via