சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மலர் அஞ்சலி
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா கண்ணீர் சிந்தியபடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா, பெங்களூரு சிறையிலிருந்து கடந்த ஜனவரி மாதம் விடுதலையானார். பின்னர், தீவிர அரசியலில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தான் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவிப்பு வெளியிட்டார்.
இது, 2021 சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளில் அவர் ஈடுபடுவார் என எதிர்பார்த்திருந்த அவரின் ஆதரவாளர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் அண்ணா தி.மு.க. தோல்வியைத் தழுவிய நிலையில், அக்கட்சித் தொண்டர்களிடம் செல்போனில் சசிகலா பேசிய ஆடியோக்கள் தொடர்ந்து வெளியாகின. அதில், அண்ணா தி.மு.க.வை மீட்டெடுப்பதில் தான் ஈடுபடுவேன். கட்சியை நிச்சயம் காப்பாற்றுவேன். விரைவில் உங்களை எல்லாம் நேரில் சந்திப்பேன் எனத் தொடர்ந்து கூறிவந்தார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்றும் கூறப்பட்டது.இந்நிலையில் அண்ணா திமுகவின் பொன்விழா ஆண்டு (அக்.17) கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் மரியாதை செலுத்த தன் இல்லத்திலிருந்து ஜெயலலிதா பயன்படுத்திய காரில் அண்ணா தி.மு.க. கொடி பொருத்திய காரில் புறப்பட்டு மெரினா சென்றார். வழிநெடுக அவருடைய ஆதரவாளர்கள் சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மெரினாவில் ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடங்களிலும் அவருடைய ஆதரவாளர்கள் ஏராளமான அளவில் குவிந்தனர்.
சிறை செல்லும் முன்பு 2017 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்று சமாதி முன் கையை ஓங்கி அடித்தபடி சசிகலா சபதம் செய்தார். இந்நிலையில் சிறையில் இருந்து விடுதலையாகி வந்தபின் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சசிகலா செல்ல திட்டமிட்டார். ஆனால் அப்போது பணிகள் முடியவில்லை என கூறி யாருக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. எனவே இன்று முதல் முறையாகச் சென்றார். அங்கு கண்ணீர் சிந்தியபடி மரியாதை செலுத்தினார். நீண்ட நேரம் ஜெயலலிதா நினைவிடம் முன்பு வணங்கி மரியாதை செலுத்தியபடி நின்றார். கண்ணீர் சிந்திய நிலையில் ஜெயலலிதா நினைவிடத்தில் ரோஜா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது துணைப் பொதுச் செயலாளரும் மண்டல பொறுப்பாளருமான ஜி.செந்தமிழன், மாவட்ட முன்னாள் துணை செயலாளர் என்.வைத்தியநாதன் உட்பட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.
முன்னதாக தி.நகரில் உள்ள வெங்கடாஜலபதி கோவிலுக்கு சென்று சசிகலா சாமி தரிசனம் செய்தார்.
ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தியபின் சசிகலாவை செய்தியாளர்கள் சந்தித்தனர்.
அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஜெயலலிதா நினைவிடத்திற்கு நான் ஏன் தாமதமாக வந்தேன் என்பது மக்களுக்கும் தொண்டர்களுக்கும் தெரியும். 5 ஆண்டுகளாக மனதில் தேக்கி வைத்திருந்த பாரத்தை ஜெயலலிதா முன் இறக்கி வைத்துவிட்டேன். எம்ஜிஆரும், ஜெயலலிதாவும், மக்களுக்காகவும், தொண்டர்களுக்காகவும் வாழ்ந்தவர்கள். இருவரும் அண்ணா தி.மு.க.,வையும் தொண்டர்களையும் காப்பாற்றுவார்கள் என நம்புகிறேன்.இவ்வாறு சசிகலா கூறினார்.
Tags :