4–வது முறையாக சாம்பியன் பட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

by Editor / 16-10-2021 03:33:05pm
4–வது முறையாக சாம்பியன் பட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து


ஐபிஎல் டி20 போட்டியின் இறுதி போட்டி துபாயில்நடைபெற்றது. இதில் சென்னை - கொல்கத்தா அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ருதுராஜ், டு பிளெஸ்ஸி இருவரும் 8 ஓவரில் 61 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. ருதுராஜ் 32 ரன் (27 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். கடந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய உத்தப்பா இந்த போட்டியிலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மறுமுனையில் டு பிளெஸ்ஸி 35 பந்தில் அரை சதம் அடித்து அசத்தினார். இருவரும் 2வது விக்கெட்டுக்கு 63 ரன் சேர்த்தனர்.


உத்தப்பா 31 ரன் (15 பந்து, 3 சிக்சர்) விளாசி வெளியேறினார்.
இதையடுத்து, டு பிளெஸ்ஸியுடன் மொயீன் அலி இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். டு பிளெஸ்ஸி 86 ரன் (59 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி கடைசி பந்தில் விக்கெட்டை பறிகொடுக்க, சிஎஸ்கே 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன் அடித்தது. மொயீன் அலி 37 ரன்னுடன் (20 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். கொல்கத்தா பந்துவீச்சில் நரைன் 2, மாவி 1 விக்கெட் வீழ்த்தினர்.


இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 193 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா களமிறங்கியது. கில் - வெங்கடேஷ் இணைந்து 10.3 ஓவரில் 91 ரன் எடுத்து சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தினர். வெங்கடேஷ் 50 ரன் (32 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) அடித்து அவுட்டாக, அடுத்து வந்த ராணா ரன் அடிக்காமலும், சுனில் நரைன் 2 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட்டானார்கள். கில் 51 ரன் (43 பந்து, 6 பவுண்டரி), தினேஷ் கார்த்திக் (9 ரன்), ஷாகிப் ஹசன் (0), திரிபாதி 2 ரன், கேப்டன் மோர்கன் 4 ரன், மாவி 20 ரன்னில் (13 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேறினர். கொல்கத்தா அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன் மட்டுமே எடுத்ததால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று 4வது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றது.


சாம்பியன் படத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வெற்றி கோப்பை மற்றும் 20 கோடி ரூபாய்க்கான காசோலையை பிசிசிஐ தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் வழங்கினர். அதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி பெற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து வெற்றி கோப்பையுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


ஐபிஎல் 14வது சீசனில் அதிக ரன் குவித்த வீரருக்கான ஆரஞ்சு தொப்பியை சிஎஸ்கே தொடக்க வீரர் ருதுராஜ் கெயிக்வாட் (16 போட்டியில் 635 ரன்) பெற்றார். இதில் ஒரு சதமும் விளாசியுள்ளார். இவருக்கு அடுத்து சென்னை அணியின் வீரர் டூ பிளிசிஸ் 16 போட்டிகளில் விளையாடி 633 ரன்கள் எடுத்துள்ளார்.


15 போட்டிகளில் 32 விக்கெட் எடுத்த பெங்களூர் அணியின் ஹர்ஷல் பட்டேலுக்கு ஊதா தொப்பி வழங்கப்பட்டது. டெல்லி வீரர் ஆவேஷ்கான் 16 போட்டிகளில் 24 விக்கெட்டுகள் வீழ்த்தி இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
போட்டிகளில் மிகவும் நேர்மையாக நடந்து கொண்டதற்கான விருது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வழங்கப்பட்டது. சிறந்த கேட்ச்சுக்கான விருது பஞ்சாப் அணியின் ரவி பிஸ்னாய்க்கு வழங்கப்பட்டது. சூப்பர் ஸ்ட்ரைக்கர் விருது டெல்லி அணி வீரர் ஷிம்ரன் ஹெட்மயருக்கும், அதிக சிக்ஸர் அடித்தவருக்கான விருத பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல். ராகுலுக்கும் வழங்கப்பட்டது.


14வது ஐபிஎல் தொடர் நாயகன் விருது மற்றும் பவர் பிளேயில் சிறந்த வீரருக்கான விருது கொல்கத்தா அணியின் வெங்கடேஷ் ஐயருக்கு வழங்கப்பட்டது. வளர்ந்து வரும் வீரருக்கான விருது மற்றும் அதிக பவுண்டரிகள் அடித்த சென்னை அணியின் ருதுராஜ் கெயிக்வாட்டுக்கு வழங்கப்பட்டது. மொத்தம் 227 ரன்கள் மற்றும் 11 விக்கெட் வீழ்த்திய சென்னை அணியின் ஜடேஜா சிறந்த ஆல் ரவுண்டராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


இந்த தொடரில் மொத்தம் 4 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. சதம் விளாசியவர்கள் சென்னை வீரர் ருத்ராஜ் கெய்க்வாட், ராஜஸ்தான் வீரர் சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர், பெங்களுருவின் தேவ்தத் படிக்கல் ஆகியோர் சதம் விளாசியுள்ளனர். குறைந்த பந்துகளில் சதம் அடித்தவர்களில் தேவ்தத் படிக்கல் உள்ளார். அவர் 51 பந்துகளில் சதம் விளாசியுள்ளார். மும்பை வீரர் இஷான் கிஷன் 16 பந்துகளில் அரை சதம் அடித்ததே அதிவேக அரை சதமாக உள்ளது.


ஒரே மேட்சில் அதிக ரன்கள் அடித்தவர்களாக ஜோஸ் பட்லர் உள்ளார். அவர் ஒரு போட்டியில் 124 ரன்கள் எடுத்தார். அதிக ஸ்டிரைக் ரேட் வைத்தவர்கள் பட்டியலில் ஹெட்மயர் 168.05 என்று முதலிடத்தில் உள்ளார். ஹர்சல் படேல் ஓவரில் ஜடேஜா எடுத்த 37 ரன்களே ஒரே ஓவரில் எடுத்த அதிகபட்ச ரன்களாக உள்ளது. இஷாந்த் சர்மா அதிகபட்சமாக 2 மெய்டன்களை வீசியுள்ளார். டெல்லி வீரர் ஆவேஷ்கான் 61 ஓவர்கள் வீசி 156 பந்துகளை டாட்(ரன் ஏதும் கொடுக்காத பந்துகள்) பால்களை வீசியுள்ளார்.


இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், சென்னை அணியிடம் இருந்து அருமையான ஆட்டம் வெளிப்பட்டது. 4-வது முறையாக ஐ.பி.எல் கோப்பையை வென்றுள்ள சென்னை அணியில் உள்ள ஒவ்வொரு வீரருக்கும் உலகெங்கிலும் இருக்கிற ஒவ்வொரு ரசிகர்களுக்கும் வாழ்த்துக்கள். இந்த வெற்றியை கொண்டாட சென்னை, தோனிக்காக அன்புடன் காத்திருக்கிறது.

இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.

 

Tags :

Share via