ஆதிதிராவிடர் -பழங்குடியினர் நல ஆணைய தலைவர், உறுப்பினர்கள்: ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாடு ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நல ஆணையத்திற்கு தலைவர், உறுப்பினர்களை நியமித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் சமூகப் பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், மாநில அளவில் ஆதி திராவிடர்கள், பழங்குடியினர் ஆகியோருடைய சட்டபூர்வமான உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களுடைய முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், ‘தமிழ்நாடு ஆதிதிராவிடர்- பழங்குடியினர் நல ஆணையம்’ என்கிற புதிய அமைப்பு ஒன்றைத் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் வகையில் உருவாக்கிட உரிய சட்டம் இயற்றப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிவிக்கப்பட்டு, அதற்கான உரிய சட்டமும் இயற்றப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, ‘தமிழ்நாடு ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நல ஆணையத்திற்கு’ கீழ்க்காணும் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தலைவர் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சிவகுமார்துணைத் தலைவர் புனிதப் பாண்டியன்
உறுப்பினர்கள் வழக்கறிஞர் குமாரதேவன்; எழில் இளங்கோவன்; லீலாவதி தனராஜ்; வழக்கறிஞர் பொ. இளஞ்செழியன்; முனைவர் கே. ரகுபதி.
இந்த ஆணையத்தின் தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம் மூன்று ஆண்டு காலம் ஆகும். இந்த ஆணையம் ஆதி திராவிடர்கள், பழங்குடியினர் ஆகியோருடைய சட்டபூர்வமான உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களுடைய முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் உரிய ஆலோசனைகளையும், பரிந்துரைகளையும் அரசுக்கு அவ்வப்போது வழங்கும்.த் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பற்றிய விவரங்கள் வருமாறு:
* ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள முன்னாள் நீதிபதி சிவகுமார் தமிழக நலன்களைக் காக்கும் வகையில் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கியுள்ளதோடு, இக்கட்டான வழக்குகளைத் திறம்படக் கையாண்டு, நடுநிலையோடு தீர்ப்புகளை வழங்கியவர்;
* ஆணையத்தின் துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள புனிதப் பாண்டியன் ஆதிதிராவிடர் நலன் மேம்பட வேண்டும் என்ற உரத்த சிந்தனையோடு செயல்பட்டு வருவதோடு, “தலித் முரசு’’ என்ற இதழை திறம்பட நடத்தி வருகிறார்.
உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டவர்களைப் பொறுத்தவரையில்,
* வழக்கறிஞர் குமாரதேவன் சமூக நீதி மற்றும் மனித உரிமைகளை நிலைநாட்டிட பல்வேறு வழக்குகளைத் தொடுத்தவர்;
* எழில் இளங்கோவன் சிறந்த எழுத்தாளர் ஆவார். ஒடுக்கப்பட்ட மக்களின் நலன் குறித்து தனது எழுத்திலும், எண்ணத்திலும், செயல்பாட்டிலும் வெளிப்படுத்தி வருபவர்;
* ஆனைமலை லீலாவதி தனராஜ் திருநெல்வேலி, பொள்ளாச்சி மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களின் கல்வி மேம்பாட்டிற்கு மாலை நேரக் கல்வி மையம் வாயிலாக கல்வி மற்றும் பழங்குடியினர் கலையைப் பயிற்றுவித்து வருபவர்;
* பொ. இளஞ்செழியன் திருநெல்வேலியில் வழக்கறிஞராகப் பணிபுரிந்து, சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள அடித்தட்டு மக்களின் உரிமைக்காகப் போராடி, அவர்களுக்கு இலவச சட்ட உதவிகளை வழங்கி வருபவர்.
* முனைவர் கே. ரகுபதி திண்டிவனம் அரசு கலைக் கல்லூரியில் வரலாற்றுத் துறை உதவி பேராசிரியராகப் பணி புரிந்து வருவதோடு, ஆதிதிராவிடர் நலன் மேம்பாட்டிற்காகவும், அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பல்வேறு நூல்களையும் எழுதியுள்ளார் என்று அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags :