இன்று தொடங்கியது அதிமுக பொன்விழா ஆண்டு

by Editor / 17-10-2021 10:49:05am
இன்று தொடங்கியது அதிமுக பொன்விழா ஆண்டு

அ.தி.மு.க. பொன்விழா கொண்டாட்டம் இன்று தொடங்குவதையொட்டி எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை செலுத்துகிறார்கள்.

1972ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ம் தேதி அதிமுக கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கி இன்றோடு 49 ஆண்டுகள் நிறைவடைந்து 50வது ஆண்டு பொன்விழா தொடங்குகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் கட்சியின் பொன்விழாவை பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடு செய்துள்ளனர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள். அதன்பிறகு கட்சி கொடியை இருவரும் ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்குகிறார்கள்.

தொடர்ந்து, அ.தி.மு.க. பொன்விழா சிறப்பு மலரை வெளியிடுகின்றனர். அதன்பிறகு தொண்டர்கள் புடைசூழ ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் தலைமைக்கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி. – எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர்.

இதேபோல், தமிழகம் முழுவதும் வட்டம், கிளைக்கழகம் சார்பில் அ.தி.மு.க. கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடப்படுகிறது. மேலும், ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட இருக்கிறது.

 

Tags :

Share via

More stories