முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை

by Editor / 18-10-2021 02:42:18pm
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை

புதுக்கோட்டை காவல்நிலையத்தில் விஜயபாஸ்கர் மீதும் அவரது மனைவி ரம்யா மீதும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து சி.விஜயபாஸ்கர் வீட்டில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், திருச்சி என 43 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

விஜயபாஸ்கர் மற்றும் அவருடைய மனைவி ரம்யா மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாகவும், 27 கோடியே 22 லட்சத்து 56 ஆயிரத்து 736 ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முறைகேடாக சேர்த்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களது மனைவி மற்றும் மூத்த மகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக வழக்கறிஞர் பாபுவேல், அதிமுக பொன்விழா கொண்டாடி எழுச்சிபெறும் நேரத்தில் பொய்யான வழக்குப்பதிவு செய்து சோதனை நடைபெறுவதாக குற்றஞ்சாட்டினார். அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு போடப்படும் வழக்குகளை நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொள்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.

விஜயபாஸ்கரின் மனைவி மற்றும் மூத்த் மகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளன. இந்தநிலையில் மனிதாபிமானம் இல்லாமல் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறுவதாக பாபு முருகவேல் கூறியுள்ளார்.

 

Tags :

Share via