கோவிஷீல்டு தடுப்பூசிக்கான மூலப்பொருட்களை  இந்தியாவுக்கு அனுப்ப அமெரிக்கா ஒப்புதல்

by Editor / 26-04-2021 06:29:31pm
கோவிஷீல்டு தடுப்பூசிக்கான மூலப்பொருட்களை  இந்தியாவுக்கு அனுப்ப அமெரிக்கா ஒப்புதல்

 

இந்தியாவில் கோவிட் 19 வைரஸ் தொற்றின் 2வது அலை மிக தீவிரமாக உள்ளது. இந்த சூழ்நிலையில் நாடு முழுவதும் தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
இதனால் அமெரிக்க அரசு தடுப்பூசி தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள் ஏற்றுமதிக்கு விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என இந்திய அரசு தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.
கோவிஷீல்டு தடுப்பு மருந்தை தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் தலைவர் ஆதார் பூனவல்லாவும் இது தொடர்பாக அமெரிக்க அரசுக்கு கடிதம் அனுப்பினார்.ஆனால் இந்தியாவின் கோரிக்கையை அமெரிக்க அரசு நிராகரித்தது. அமெரிக்க மக்களுக்கு முதலில் முன்னுரிமை கொடுக்கப்படும் என தெரிவித்தது.
இந்நிலையில், திடீரென்று இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று தடையை தளர்த்தி, இந்தியாவுக்கு மூலப் பொருட்களை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
மேலும் ஐதராபாத்தில் உள்ள பயோ இ என்ற நிறுவனம் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க தேவையான உதவிகளை செய்யவுள்ளதாகவும் அமெரிக்க தூதரகத்திற்கு நிபுணர் குழு ஒன்றை அனுப்ப உள்ளதாகவும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை தொடர்புகொண்டு பேசிய, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் செய்தி தொடர்பாளர் எமிலி ஹார்ன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘கோவிஷீல்ட் தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்கு தேவையான மூலப்பொருட்களை அமெரிக்கா உடனடியாக இந்தியாவுக்கு அனுப்ப உள்ளது’’

‘‘மேலும், கொரோனா சிகிச்சைகள், சோதனைகளுக்கு தேவையான உபகரணங்கள், வென்டிலேட்டர்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை இந்தியாவுக்கு உடனடியாக வழங்கப்படும். மேலும், அவசரநிலை அடிப்படையில், இந்தியாவுக்கு தேவையான ஆக்சிஜன் உற்பத்தி கருவிகளை வழங்கவும் அமெரிக்கா முடிவு செய்திருக்கிறது’’ என எமிலி ஹார்ன் கூறினார்.

இந்தியாவுக்கு தேவையான மூலப்பொருட்கள் மற்றும் ஆக்சிஜனை அனுப்பி வைக்கும்படி கடந்த ஒரு வாரமாக அதிபர் ஜோ பிடனுக்கு அழுத்தம் அதிகரித்து வந்த நிலையில் அமெரிக்க அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. 

 

Tags :

Share via