அ.தி.மு.க. நிர்வாகி இளங்கோவன் ரூ.70 கோடி முதலீடு..அதிர்ச்சி

by Admin / 24-10-2021 03:21:21pm
அ.தி.மு.க. நிர்வாகி இளங்கோவன் ரூ.70 கோடி முதலீடு..அதிர்ச்சி

அ.தி.மு.க. நிர்வாகி இளங்கோவன், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் 70 கோடி ரூபாய் மதிப்பிலான பங்கு முதலீடுகள் செய்திருப்பதாக, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

 முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரும், மாநில கூட்டுறவு வங்கியின் தலைவருமான இளங்கோவன், அவருடைய மகன் பிரவீன்குமார் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக புகார் எழுந்தது.

அதன்பேரில் இளங்கோவனின் வீடு, தோட்டத்து வீடு, அலுவலகம், உறவினர்கள், நண்பர்களின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு தொடர்புடைய இடங்கள் என 36 இடங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென சோதனை நடத்தினர்.

இதில் 29 லட்ச ரூபாய், 21 கிலோ தங்க நகைகள், சொகுசு கார்கள், சொகுசு பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர்கள் ஏற்கனவே தெரிவித்தனர்.

இந்நிலையில் இளங்கோவன் 70 கோடி ரூபாய் அளவில் முதலீடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டதாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர். சென்னையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, இளங்கோவன் பெயரில் ஐந்தரை லட்ச ரூபாய் மதிப்பிலான அந்நிய செலவாணி, 25 கோடி ரூபாய் மதிப்பிலான உள்நாட்டு பங்கு வர்த்தக முதலீடுகள், 45 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு நிறுவன பங்கு முதலீடுகள் ஆகியவை இருப்பது கண்டறியப்பட்டுள்ளன.
 
மேலும், சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள நகை கடையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சுமார் 20 கிலோ தங்க நகைகள் மற்றும் 280 கிலோ வெள்ளி நகைகள், இருப்பை விட கூடுதலாக இருப்பது கண்டறியப்பட்டது.

இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு, தக்க நடவடிக்கை எடுக்கும் வகையில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்குக்கு தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கூறியுள்ளனர்.

 

Tags :

Share via