பெண் அதிகாரிக்கு பாலியல் வன்கொடுமை: விமானப்படை அதிகாரியிடம் விசாரணை நடத்த அனுமதி
கோவையில் பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், விமானப்படை அதிகாரியிடம் போலீசார் விசாரணை நடத்த, மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கோவை மாவட்டம் ரெட் பீல்டில் உள்ள இந்திய விமானப்படை கல்லூரியில் பயிற்சிக்காக சென்ற பெண் அதிகாரியை, மற்றொரு அதிகாரியான அமிதேஷ் ஹர்முக் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி கொடுத்த புகாரில், விமானப்படை அதிகாரி அமிதேஷ் ஹர்முக்கை கைது செய்து, கோவை மகளிர் போலீசார் சிறையில் அடைத்தனர். இதனிடையே விமானப்படை தாக்கல் செய்த மனுவை விசாரித்த கூடுதல் மகளிர் நீதிமன்றம், அதிகாரி அமிதேஷ் ஹர்முக்கை விமானப்படையிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து போலீஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றம், விசாரணையின் போது போலீசாருக்கு எவ்வித இடையூறும் விமானப்படை ஏற்படுத்த கூடாது என ஆணையிட்டுள்ளது.
விசாரணை முடிந்த பின்னர் அதற்கான ஆவணங்களை போலீசார் தயார் செய்ய வேண்டும் என்றும், அதில் ஒரு நகலை விமானப்படை அதிகாரிகளிடமும், மற்றொன்றை நீதிமன்றத்திலும் தாக்கல் செய்ய வேண்டும் எனவும், நீதிபதி உத்தரவிட்டார்.
Tags :