கருணாநிதிக்கு மணிமண்டபம்: ஓ.பி.எஸ். வரவேற்பு
கருணாநிதிக்கு சென்னை கடற்கரையில் ரூ.39 கோடி செலவில் நினைவிடம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்ததை மனதார வரவேற்கிறேன் என எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
இந்த அறிவிப்புக்கு சட்டசபையில் அமைச்சர்கள், சபாநாயகர், கட்சி தலைவர்கள் வரவேற்று நன்றி கூறினார்கள்.
சட்டசபையில் கருணாநிதிக்கு சென்னை கடற்கரையில் ரூ.39 கோடி செலவில் நினைவிடம் கட்டப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.இதனை வரவேற்று எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அவர் பேசியதாவது:
இன்று வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை விதி 110 ன் கீழ் முதலமைச்சர் அறிவித்து இருக்கிறார். இதனை நானும், எதிர்கட்சி தலைவர் உட்பட அனைவரும் மனதார வரவேற்கிறோம். கலைஞரின் சிறப்பை பற்றி முதலமைச்சர் எடுத்து கூறினார். அவர் சொன்ன செய்திகள் அனைத்தும் நினைவிடத்தில் இடம் பெற வேண்டும்.
நாமெல்லாம் பேரறிஞர் அண்ணாவின் குடையின் கீழ் அரசியல் பாடம் கற்ற வர்கள் என்பதை இந்த நேரத்தில் நினைவு கூற கடமைப்பட்டுள்ளேன். என் தந்தை கலைஞர் கருணாநிதியின் தீவிர பக்தர். கலைஞர் கருணாநிதியின் திரைப்பட வசனத்தை பார்த்து பார்த்து ரசித்தவர். கலைஞரின் மனோகரா, பராசக்தி திரைப்படங்களை பார்த்தவர். கலைஞரின் வசனத்தில் அனல் பறக்கும் என்று முதல்வர் கூறினார். அந்த அனல் பறக்கும் பேச்சுக்கள் சமுதாயத்தை சீர்திருத்தும் கருத்துகளாக இருந்தது. அவருக்கு இங்கு மணி மண்டபம் கட்டுவதாக அறிவித்ததை எனது சார்பிலும் கட்சி சார்பிலும் முழுமனதுடன் ஒருமனதாக வரவேற்கிறேன். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
முதலமைச்சரின் அறிவிப்புக்கு அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, சாமிநாதன், சபாநாயகர் அப்பாவு, செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பா.ம.க.), நயினார் நாகேந்திரன் (பா.ஜ.க.), சிந்தனை செல்வன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி), நாகை மாலி (மார்க்சிஸ்ட்), டி.ராமச்சந்திரன் (கம்யூனிஸ்ட்), சதர்ன் திருமலை குமார் (ம.தி.மு.க.), ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), ஈஸ்வரன் (கொங்கு நாடு மக்கள் கட்சி), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி) ஆகியோர் வரவேற்று நன்றி தெரிவித்தார்.
Tags :