30% நாய்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது..ஆய்வில் அதிர்ச்சி தகவல்
சென்னையில் 30 சதவீத வீட்டு நாய்களுக்கு மட்டுமே தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது.
வெறிநாய் மற்றும் வைரஸ் பாதித்த நாய்கள் கடிப்பதால் ஏற்படக்கூடிய ராபீஸ் நோய் குறித்து பொதுமக்கள் மற்றும் நாய் வளர்ப்போர் மத்தியில் இருக்கக்கூடிய விழிப்புணர்வின் நிலை குறித்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சார்பில் சென்னையில் அண்மையில் ஆய்வு நடத்தப்பட்டது.
கடந்த செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் சென்னையின் 15 மண்டலங்களில் 84 வீட்டு பராமரிப்பு நாய்கள் மற்றும் 139 பகுதி பராமரிப்பு நாய்கள் என மொத்தம் 223 நாய்களிடையே ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 67 நாய்களுக்கு மட்டுமே முழுமையான தடுப்பூசி குறித்த காலத்திற்குள்ளாக செலுத்தப்பட்டு இருப்பதும் , 44 நாய்களுக்கு காலம் கடந்து செலுத்தப்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் 114 நாய்களுக்கு முழுமையாக எந்த தடுப்பூசியும் வழங்கப்படாத நிலை கண்டறியப்பட்ட நிலையில் இதில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட நோய்களுக்கு முறையாக தடுப்பூசிகள் செலுத்தப்படவில்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும் 90 சதவிகித நபர்களுக்கு ரேபிஸ் வைரஸ் குறித்த விழிப்புணர்வு இருப்பதாக கண்டறியப்பட்ட நிலையிலும் நாய்களை முறையாக பராமரிக்காத நிலை மற்றும் நாய் கடி ஏற்படும் பட்சத்தில் உரிய மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதிலும் பொதுமக்கள் மத்தியில் தயக்கம் நிலவுவதாக ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
உயிருக்கே கேடாய் முடியும் வெறிநாய் கடி தொடர்பாக பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு தேவை என்பதும் நாய்களுக்கு உரிய காலத்திற்குள் தடுப்பூசியை செலுத்துவதன் மூலம் ராபீஸ் உயிரிழப்புகளை குறைக்க முடியும். எனவே நாய் கடித்தால் பொதுமக்கள் அச்சமின்றி உடனடியாக மருத்துவர்களை நாட வேண்டும் என்பது மருத்துவர்களின் வேண்டுகோளாக உள்ளது.
Tags :