30–ந்தேதி ஜெயந்தி விழாவுக்காக தேவரின் தங்கக் கவசம் ஓ.பன்னீர்செல்வம் ஒப்படைத்தார்

by Editor / 25-10-2021 04:25:06pm
30–ந்தேதி ஜெயந்தி விழாவுக்காக தேவரின் தங்கக் கவசம் ஓ.பன்னீர்செல்வம் ஒப்படைத்தார்


சுதந்திரப்போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவிற்காக அவரது திருவுருவ சிலையின் தங்கக் கவசத்தை தேவர் நினைவிட பொறுப்பாளரிடம் அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், பொருளாள ருமாகிய ஓ.பன்னீர்செல்வம் ஒப்படைத்தார்.


ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடம் உள்ளது. இங்குள்ள தேவரின திருவுருவ சிலைக்கு 2014ம் ஆண்டில் அண்ணா தி.மு.க. சார்பில் 13 கிலோ எடையுள்ள தங்கக் கவசத்தை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவின்போது தேவரின் சிலைக்கு தங்க கவசம் அணவிக்கப்படுவது வழக்கம்.


இதற்காக மதுரை அண்ணாநகரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் பாதுகாக்கப்படும் இந்த தங்கக் கவசத்தை அண்ணா தி.மு.க. பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்திட்டு வாங்கி, நினைவிட பொறுப்பாளர்களிடம் ஒப்படைப்பது வழக்கம். இந்தாண்டு முத்துராமலிங்க தேவரின் 117 வது ஜெயந்தி விழா மற்றும் 49வது குரு பூஜை அக்டோபர் 30ம் தேதி நடைபெறுகிறது.
இதைமுன்னிட்டு வங்கி பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த தங்கக் கவசத்தை எடுத்து ஓ.பன்னீர்செல்வம், நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜனிடம் இன்று ஒப்படைத்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், எம்.மணிகண்டன், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. வி.வி.ராஜன்செல்லப்பா ஆகியோர் கலந்து கொண்டனர்.


இதன் பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் தங்க கவசம் பசும்பொன் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

 

Tags :

Share via