சர்தார் வல்லபாய் பட்டேல் எப்போதும் தேசிய நலனுக்கு முன்னுரிமை அளித்தார்: மோடி புகழாரம்

by Admin / 31-10-2021 06:06:12pm
சர்தார் வல்லபாய் பட்டேல் எப்போதும் தேசிய நலனுக்கு முன்னுரிமை அளித்தார்: மோடி புகழாரம்

 

இந்தியாவின் முதல் துணை பிரதமரான சர்தார் வல்லபாய் பட்டேலின் 146-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

அவருடைய பிறந்தநாள் விழா ‘தேசிய ஒறுமைப்பாட்டு தினமாக’ கொண்டாடப்படும் என்று 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். அதன்படி தேசிய ஒறுமைப்பாட்டு தினமாக இந்த கொண்டாட்டம் நடந்தது.

குஜராத் மாநிலம் கெவாடியாவில் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு உலகிலேயே உயரமான சிலை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு தேசிய ஒறுமைப்பாட்டு தினம் கொண்டாடப்பட்டது.

வழக்கமாக இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் பங்கேற்று வந்தார். ஆனால் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இத்தாலி சென்று இருப்பதால் அவரால் பங்கேற்க முடியவில்லை.

எனவே உள்துறை மந்திரி அமித்ஷா இந்த விழாவில் கலந்து கொண்டார். அப்போது இந்திய பாதுகாப்பு படை மற்றும் அனைத்து மாநில போலீசாரின் அணிவகுப்பு, விளையாட்டு வீரர்கள் மற்றும் கலைக்குழுவினரின் அணி வகுப்பும் நடைபெற்றது.

அப்போது பிரதமர் நரேந்திர மோடி இத்தாலியில் இருந்தபடி காணொலி காட்சி மூலமாக உரை நிகழ்த்தினார்.தேசிய ஒறுமைப்பாட்டு தினத்தில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

சர்தார் வல்லபாய் பட்டேல் தனது வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் இந்த நாட்டுக்காக அர்ப்பணித்தார். பல மன்னர் ஆட்சி பிரதேசங்களையும் நாட்டுடன் இணைத்து வலுவான இந்தியாவை அவர் உருவாக்கினார்.

அத்தகைய தேச நாயகருக்கு இன்று நாடு தனது அஞ்சலியை செலுத்துகிறது. இந்தியா எப்போதும் வலிமையானதாக இருக்க வேண்டும். அனைவரையும் உள்ளடக்கி உணர்வுப்பூர்வமாக திகழ வேண்டும். ‘ஒரே பாரதம், சிறந்த பாரதம்’ என்பதே அவரது கனவாக இருந்தது. அமைதியான அதே நேரத்தில் வளர்ச்சிமிக்க நாடாக இந்தியா திகழ வேண்டும் என்று நினைத்தார்.

அவருடைய கனவை நாம் நிறைவேற்ற வேண்டுமென்றால் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளான இன்று தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது.

இன்று நாடு பல்வேறு வளர்ச்சிகளை பெற்றுள்ளது. சர்தார் வல்லபாய் பட்டேல் எப்போதும் நாட்டின் நலனையே முதன்மைப்படுத்தினார். அவர் அளித்த உத்வேகம் காரணமாக இந்தியா இன்று உள்நாட்டு அளவிலும், வெளிநாட்டு அளவிலும் வரக்கூடிய எந்தவித சவால்களையும் சந்திப்பதற்கு தயாராக இருக்கிறது.

பூகோள ரீதியாக மட்டும் இந்தியா இன்று ஒன்றாக இருக்கவில்லை. கலாச்சாரம், வாழ்க்கை முறை, எண்ணங்கள் என அனைத்திலும் நாம் ஒன்றாக இருக்கிறோம். 135 கோடி மக்களை கொண்ட இந்தியா எண்ணத்திலும், கனவிலும் ஒன்றாக இருக்கிறது.

சர்தார் வல்லபாய் பட்டேல் வரலாற்றில் மட்டுமல்ல அனைத்து இந்தியர்களின் இதயங்களிலும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

இன்றைய இந்தியாவில் அனைவருக்கும் சம வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆண்களுக்கும், பெண்களுக்கும் மற்றும் அனைத்து சமூக மக்களுக்கும் வாய்ப்புகள் சமநிலையில் கிடைக்கின்றன. இந்தியா தனது நலனை பாதுகாப்பதற்காக தன்னம் பிக்கையுடன் புதிய பயணத்தை தொடங்கி உள்ளது.

நாம் முயற்சி செய்தால் நாட்டை முன்னேற்ற முடியும் என்று சர்தார் வல்லபாய் பட்டேல் கூறியவற்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

நீர், நிலம், வானம், விண்வெளி என அனைத்துதுறைகளிலும் என்றும் இல்லாத அளவுக்கு நாம் முன்னோடியாக இருக்கிறோம். மக்களிடம் உள்ள இடைவெளிகள் குறைக்கப்பட்டு தேசிய ஒற்றுமை மேம்படுத்தப்படுகிறது.

பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட பல சீர்திருத்தங்களின் விளைவாக இந்தியா இன்று கவர்ச்சிகரமான முதலீட்டு இடமாக மாறி இருக்கிறது. இதுபோன்ற இலக்குகளை அடைவதற்கு சர்தார் வல்லபாய் பட்டேல் அமைத்துக் கொடுத்த அடித்தளமே இதற்கு காரணம்.

பல பத்தாண்டுகளாக பழமையான தேவையற்ற சட்டங்கள் இருந்தன. அவற்றை எல்லாம் கடந்த 7 ஆண்டுகளில் மாற்றி புதிய லட்சியங்களை நோக்கி பயணித்து வருகிறோம். காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள், இமயமலையில் உள்ள கிராமங்கள் என அனைவரும் முன்னேற்றப் பாதையில் உள்ளனர்.

 

Tags :

Share via