மனநல கோளாறு பாதிப்பு.. விடுபடும் வழிகள் !

by Editor / 24-07-2021 04:25:41pm
மனநல கோளாறு பாதிப்பு.. விடுபடும் வழிகள் !

 

உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை படி, உலக அளவில் 3.6 சதவீதம் பேர் கவலை சார்ந்த மனநல கோளாறு பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

பதற்றத்தின்போது நிறைய பேருக்கு வியர்வை வெளிப்படும். வேலைப்பளு, எடுத்த காரியத்தை விரைவாக முடிக்கமுடியாத சூழல், ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்தல், வாழ்க்கையில் எதிர்பாராத பிரச்சினையை சந்தித்தல் போன்றவை பதற்றத்தை அதிகரிக்க செய்யும். அப்போது ஏற்படும் அச்சம் பீதியையும் உண்டாக்கும். அதனால் இனம் புரியாத கவலை வாட்டும். உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை படி, உலக அளவில் 3.6 சதவீதம் பேர் கவலை சார்ந்த மனநல கோளாறு பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள்.


பெருநகரங்களில் வசிப்பவர்களில் 30 சதவீதம் பேர் வாழ்க்கையில் ஒருமுறையாவது பதற்றத்தையும், பீதியையும் எதிர்கொள்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பதற்றமும், பீதியும் ஏற்படும்போது திடீரென்று இதயத்துடிப்பு அதிகரிக்கும், அதிகப்படியான வியர்வை வெளியேறும். கை, கால்களில் நடுக்கம், தொண்டை வறண்டு போதல், குமட்டல், வயிற்றுவலி, கண்கள் சொருகி மயக்கம் போன்ற பாதிப்புகளும் நேரும். இத்தகைய பீதியும், பதற்றமும் சில நிமிடங்களில் நீங்கிவிடும். ஆனால் நடந்ததை நினைத்து பார்த்து வருந்தும்போது ஏற்படும் கவலை, ஆபத்தை அதிகப்படுத்திவிடும்.

பண்டைய காலங்களில் காடுகளில் வசித்த மனிதன் விலங்குகளுடன் போராடும் மன தைரியத்தை வளர்த்துக்கொண்டான். அதற்கு அட்ரினலின் எனும் ஒருவகை ஹார்மோனின் பங்களிப்பு அவசியமானதாக இருந்தது. ஆனால் இன்று பண்டையகால மனிதன் போல் உடலளவிலும், மனதளவிலும் வலிமையை வளர்த்துக்கொள்ள முடியாத சூழல் உருவாகிவிட்டது. உடல் உழைப்பும் குறைந்துபோய்விட்டது. சின்ன பிரச்சினைகளை கையாள்வதற்கு கூட நிறைய பேர் தடுமாறுகிறார்கள். உடலியலும், உளவியலும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்று ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. ஆயுர்வேத உணவு பழக்க வழிமுறையை பின்தொடர்ந்து வந்தால் பீதி, பயம், கவலை போன்ற மனநல பிரச்சினைகளில் இருந்து விடுபட்டுவிடலாம் என்றும் கூறுகிறது.

எண்ணெய்யில் சமைத்த உணவை சாப்பிடுவதாக இருந்தால் சூடாக உடனே சாப்பிட்டுவிட வேண்டும். அது பதற்றத்தை சமாளிக்க உதவும். பீட்ரூட், காலிபிளவர், சர்க்கரைவள்ளிக்கிழங்கு, சோளம், பூசணி, முள்ளங்கி, நெய், வெண்ணெய், மோர் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை, காபின், குளிர்விக்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட பானங்கள், பொறிக்கப்பட்ட நொறுக்குத்தீனிகளை தவிர்க்க வேண்டும். அதிகாலையில் சூரிய வெளிச்சம் உடலில் படும்படி நடப்பதும், சுத்தமான காற்றை சுவாசிப்பதும் கவலையை போக்க உதவும்.


நல்லெண்ணெய்யை சூடுபடுத்தி நெற்றி மற்றும் உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்வதும் பலன் தரும். வாரம் ஒருமுறையாவது உடலில் எண்ணெய் தடவி மசாஜ் செய்துவிட்டு குளிப்பதும் நல்லது. இரவில் வெதுவெதுப்பான நீரில் குளிப்பதும் மனதிற்கு இதமளிக்கும். கவலையை போக்குவதற்கும் உதவும். தூங்க செல்வதற்கு முன்பு ஒரு டம்ளர் பாலில் தேன் மற்றும் குங்குமப்பூ கலந்து பருகி வருவதும் பலன் தரும். ஒரு டம்ளர் சூடான நீரில் ரோஜா இதழ்களை கலந்து சூடு ஆறியதும் சிறிதளவு தேன் கலந்து தினமும் இரண்டு முறை பருகிவரலாம்.

 

Tags :

Share via