கோயம்புத்தூரில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கிவைத்த-முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

by Editor / 22-11-2021 06:35:19pm
கோயம்புத்தூரில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கிவைத்த-முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று கோயம்புத்தூர் வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், 587.91 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 70 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 89.73 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 128 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கோயம்புத்தூர் வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு:

இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்கும் மாண்புமிகு நீதியரசர் அவர்களின் பதவி ஏற்பு விழாவில் காலையில் முதலமைச்சர் என்கிற முறையில் நானும் கலந்துகொண்டேன். அதைத் தொடர்ந்து உடனடியாக விமானத்தைப் பிடித்து சரியாக 11.30 மணியளவில் நான் கோவை விமான நிலையத்திற்கு வந்துசேர்ந்தாலும், அங்கிருந்து இந்த இடத்திற்கு வருவதற்கு ஏறக்குறைய இரண்டரை மணி நேரம், மூன்று மணி நேரம் ஆகியிருக்கிறது. காரணம் வருகிற வழியெல்லாம் சாலையில் இருமருங்கிலும் பொதுமக்கள், தாய்மார்கள், பெரியோர்கள், நண்பர்கள், தொழிலாள தோழர்கள் மிகுந்த ஆர்வத்தோடு எங்களை வரவேற்றனர். அதையெல்லாம் முடித்துவிட்டு குறித்த நேரத்திற்கு இந்த நிகழ்ச்சிக்கு வரமுடியாமல், ஆனால், கொஞ்சம் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கிறேன். அந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டு பல்வேறு அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கவும், நலத்திட்ட உதவிகள் வழங்கிடவும், நிதி உதவிகளைச் செய்திடவும் நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன்.

அதேபோல் ஆட்சி அமைத்த அன்றைக்கே உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற தனித் துறையை நாங்கள் உருவாக்கினோம். அனைத்துப் பெட்டிகளையும் திறந்தோம். இலட்சக்கணக்கான மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு மனிதனின் கவலையையும் தீர்க்கும் அரசாக திராவிட முன்னேற்றக் கழக அரசு இருக்கும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மக்கள் மாநாட்டின் வாயிலாக கோவை மாவட்டத்துக்கு ஏராளமான திட்டங்களைத் தொடங்கி வைப்பதில், அதை அறிவிப்பதில் நான் பெருமைப்படுகிறேன்.

❖ கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு 1,132 கோடி ரூபாயை இந்த அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. நிலம் கையகப்படுத்தப்பட்டு இந்தப் பணிகள் விரைவில் துவங்கும் என்பதையும் நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

❖ மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்த அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டிருக்கிறேன்.

கோயம்புத்தூர் மாநகராட்சிப் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சீராக குடிநீர் வழங்குவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

❖ பத்து ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.க. ஆட்சிக்காலத்தில்தான் கோவை மாநகரப் பகுதியில் திட்டச் சாலைகள் அமைக்கப்பட்டன. கடந்த ஆட்சிக்காலத்தில் எந்தவொரு திட்டச் சாலைப் பணியும் மேற்கொள்ளப்படவில்லை.

இப்போது மீண்டும் தி.மு.க. ஆட்சியில் அந்தப் பணிகளை முடுக்கிவிட உத்தரவிட்டிருக்கிறேன். ஐந்து திட்டச் சாலைகளைச் செயல்படுத்துவதற்கும், கோவையில் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள சாலைகளை மேம்படுத்துவதற்கும் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

❖ கோவை மாநகராட்சியில் புதிதாகச் சேர்க்கப்பட்ட வெள்ளக்கிணறு, சின்னவேடம்பட்டி மற்றும் சரவணம்பட்டி பகுதிகளில் புதிய பாதாளச் சாக்கடைத் திட்டங்கள் அதற்கு 309 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படவிருக்கிறது.

❖ கோவை மாநகராட்சியின் மையப் பகுதியில் இருக்கக்கூடிய சிறைச்சாலை, அது நகரின் வெளியே கொண்டு செல்லப்படும்.

❖ காந்திபுரத்தில் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய நடைபாதை போன்ற அனைத்து வசதிகளும், கூட்ட அரங்கு, வெளி அரங்கு போன்ற கட்டமைப்புகளும் கொண்ட செம்மொழிப் பூங்கா இரண்டு கட்டங்களாக
200 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படவிருக்கிறது.

❖ கோவை மாநகரப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை முறையை மேலும் மேம்படுத்துவதற்காக 11 கோடி ரூபாய் செலவில் கூடுதல் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது.

❖ கோவை மாநகர மக்களுக்குச் சிறப்பாக மருத்துவ வசதிகளை அளித்திடும் வகையில் 16 கோடி ரூபாய் செலவில், 63 நலவாழ்வு மையங்கள் மற்றும் மூன்று மருத்துவ ஆய்வுக்கூடங்கள் கட்டப்பட இருக்கிறது.

❖ கோவை மாநகரப் பகுதியில் சாலை விளக்கு வசதிகள் இல்லாத பகுதிகளில் 20 கோடி ரூபாய் செலவில் புதிய தெரு விளக்குகள் அமைக்கக்கூடிய பணி செயல்படுத்தப்படவிருக்கிறது.

இப்பணிகளுக்கான அரசு ஆணைகளை விரைவில் வெளியிட்டு - அதற்கான நிதியை விரைந்து ஒதுக்கி திட்டப்பணிகளை விரைந்து முடித்து நிச்சயமாக அதை மக்களிடத்தில் நாங்கள் ஒப்படைக்க இருக்கிறோம் என்ற உறுதியை உங்களையெல்லாம் வைத்துக்கொண்டு நான் பெருமையோடு இதைக் குறிப்பிட விரும்புகிறேன்.

சென்னை மாநகரப் பகுதி போன்றே, கோவை மாநகரத்தினுடைய வளர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க அரசு திட்டமிட்டிருக்கிறது. கோவை மாநகரத்தின் வளர்ச்சியை முறைப்படுத்துவதற்காக கோவை நகர்ப்புற வளர்ச்சிக் குழுமம் ஏற்படுத்தப்படும் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தோம். அதன் அடிப்படையில் அற்கான அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது.

கோவையைப் பொறுத்தவரையில் வளம் கொண்ட தொழில் மாவட்டம் ஆகும். பெரிய தொழில்கள் மட்டுமல்ல, சிறுகுறு தொழில்களும் இந்த மாவட்டத்தில் அதிகம். தொழில்கள் மூலமாகத் தமிழ்நாட்டுக்கு ஏற்றுமதி வருவாய் தரக்கூடிய மாவட்டம் இதுதான். தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கக்கூடிய மாவட்டம் இந்த மாவட்டம். இவை அனைத்துக்கும் மேலாக இலட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கக்கூடிய மாவட்டமும் இந்த கோவை மாவட்டம்தான். இதுபோன்ற தொழில் வளர்ச்சி, அனைத்து மாவட்டங்களிலும் பரவ வேண்டும் என்பதுதான் உங்களுடைய ஆசை மட்டுமல்ல என்னுடைய ஆசையும் அதுதான். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒவ்வொரு விதமான சிறப்பான தொழில்கள் உண்டு. அத்தகைய தொழில்களுக்கு சிறப்புக் கவனம் செலுத்தி, சீர்தூக்கி எல்லாவிதப் பணிகளிலும் ஈடுபடுவது என்று அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தியாவிலேயே தொழில்துறையில் சிறந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை வளர்த்தெடுக்க வேண்டும். இந்தியாவின் முதல் தொழில் முகவரியாக தமிழ்நாடு மாற வேண்டும்.

நாளை காலை கோவையில் தொழிலதிபர்கள் மாநாடு நடைபெற இருக்கிறது. அப்படி நடைபெறுகிற அந்த மாநாட்டில் பல்வேறு ஒப்பந்தங்களில் (MoU) கையெழுத்திட இருக்கிறோம். கோடிக்கணக்கான முதலீடுகள் ஈர்க்கப்பட உள்ளன. அதன் மூலமாக இலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக இருக்கிறது.

இதுபோன்ற தொழில் அமைப்புகளின் மாநாடுகள் தொடர்ந்து நடக்க இருக்கின்றன. தொழில்துறையை வளர்ப்பதன் மூலமாக மக்களை வளர்க்க முடியும்! மக்களது வளர்ச்சியில்தான் நாட்டின் வளர்ச்சி அமைந்துள்ளது.

இந்தியாவின் முன்னணி தொழில் மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றிக் காட்டுவோம். அப்படி மாற்றுகிற நேரத்தில் அதில் முதலிடம் கோவைக்குத்தான் உண்டு என்பதைப் பெருமையுடன் நான் சொல்ல விரும்புகிறேன்.

திட்டங்களைப் பற்றித்தான், அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கக்கூடிய நிதி ஆதாரத்தைப் பற்றித்தான், அது என்னென்ன கட்டங்களில் நிறைவேற்றப்படவிருக்கிறது என்பதைப் பற்றி சொல்வதற்காகத்தான் நான் இவ்வளவு சொன்னேனே தவிர, நான் எப்பொழுதுமே அதிகம் பேசமாட்டேன். செயலில் என்னுடைய பணிகள் இருக்கும். பேச்சைக் குறைத்துச் செயலில் நம்முடைய திறமையைக் காட்டு என்ற பழமொழிக்கேற்ப நிச்சயமாக இந்த மாவட்டம் தமிழகத்திலேயே தலைசிறந்த மாவட்டமாக, எல்லாவற்றிலும் தலைசிறந்த மாவட்டமாக இருக்கிறது என்ற அந்த பெருமையைப் பெறுவதற்கு நாங்கள் பணியாற்றத் தொடங்கிவிட்டோம். அப்படி ஆற்றக்கூடிய பணிகளுக்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும், ஆதரவு தரவேண்டும் என்று கேட்டு, இந்த நல்ல வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.”

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

கோயம்புத்தூரில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கிவைத்த-முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
 

Tags :

Share via