பறவை காய்ச்சல் பரவலை தடுக்க 40 ஆயிரம் வாத்துகள் அழிப்பு

by Editor / 15-12-2021 02:07:12pm
பறவை காய்ச்சல் பரவலை தடுக்க 40 ஆயிரம் வாத்துகள் அழிப்பு

கோட்டயத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள பகுதியில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் பறவை இறைச்சி, முட்டைகள் விற்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது.

கேரளாவின் ஆலப்புழா, கோட்டயம், மலப்புரம் மாவட்டங்களில் ஏராளமான பறவைகள் வளர்க்கப்படுகின்றன.
 
வீடுகளில் வளர்க்கப்படும் வாத்துகள், கோழிகள் பண்டிகை நாட்களில் இறைச்சிக்காக விற்கப்படும். குறிப்பாக கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை நாட்களில் வாத்து, கோழி விற்பனை அதிகமாக இருக்கும்.

இதற்காக ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் பண்ணைகள் அமைத்து ஆயிரக்கணக்கில் பறவைகள் வளர்க்கப்படும்.

ஆலப்புழா மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சில பண்ணைகளில் வளர்க்கப்பட்ட வாத்துகளுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த கால்நடை மருத்துவர்கள் அந்த பறவைகளின் மாதிரிகளை மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள கால்நடை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இதில் அந்த பறவைகளுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. இப்பாதிப்பு மனிதர்களையும் பாதிக்கும் என்பதால் உடனடியாக இந்த பறவைகளை அழிக்க ஆலப்புழா மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது. இதன்படி சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாத்துகள் அழிக்கப்பட்டன.

இந்த நிலையில் ஆலப்புழா மாவட்டத்தின் அண்டை மாவட்டமான கோட்டயத்திலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பறவைகளுக்கு பாதிப்பு இருப்பது தெரியவந்தது. உடனடியாக அதன் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு போபால் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது.

நேற்று இதன்முடிவுகள் வந்தன. இதில் கோட்டயத்திலும் பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கோட்டயம் மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ தலைமையில் அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தினர்.

இக்கூட்டத்தில் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள அய்மனம், கல்லரா, வெச்சூர் பஞ்சாயத்து பகுதியில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்படும் வாத்துகள் மற்றும் பறவைகளை உடனடியாக அழிக்க முடிவு செய்யப்பட்டது.

இப்பகுதியில் உள்ள பண்ணைகளில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாத்துகள் வளர்க்கப்படுகின்றன. இவை அனைத்தும் இன்று மொத்தமாக அழிக்கப்படுகிறது.

இதுபோல பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள பகுதியில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் பறவை இறைச்சி, முட்டைகள் விற்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது. 

 

Tags :

Share via